சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க நாம் தயார்: எதிர்க்கட்சித் தலைவர்
கல்வித் துறையில் முற்போக்காக செயற்படும் நிபுணர்கள் பலர் உள்ளனர்.
கல்வி சீர்திருத்தம் தொடர்பாக அரசாங்கம் முறையான கலந்துரையாடலை முன்னெடுத்தால், எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் எமது கருத்துக்களை முன்வைப்போம். இந்த சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பை வழங்க நாம் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பலவீனமான இந்த அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களால் பெருமளவான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி சீர்திருத்தங்களை இடைநிறுத்திய பழியை எதிர்க்கட்சியின் மீது போடுவதற்கு அரசாங்கம் முயல்கின்றனர். ஆனால் அந்த சீர்திருத்தங்களை தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே இடை நிறுத்தியது.
6 ஆம் தரம் முதல் கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் இலட்சக்கணக்கான பெற்றோர்களும் பிள்ளைகளும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அரசாங்கம் இதனை ஒத்தி வைத்ததன் காரணமாக அவர்களின் எதிர்பார்புகள் கானல் நீராக மாறிப்போயுள்ளது.
எனவே, கல்வித் துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடி, பொறுத்தமற்ற விடயங்களை நீக்கி, சரியாகவும் விரைந்தும் இந்த வருடமே இந்த கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வித் துறையில் முற்போக்காக செயற்படும் நிபுணர்கள் பலர் உள்ளனர்.
அவர்களுடன் கலந்துரையாடி முற்போக்கான முடிவை எடுக்குமாறு யோசனை முன்வைக்கின்றேன். கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக அரசாங்கம் முறையான கலந்துரையாடலை முன்னெடுத்தால், எதிர்க்கட்சியும் தங்கள் கருத்துக்களை முன்வைப்போம். இந்த சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பை வழங்க நாம் தயார் என்றார்.





