அரச திணைக்களங்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை கடிதம்
1996 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அனைத்து பிரதிவாதி தரப்புக்களும் கடமைப்பட்டுள்ளனர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் பிரகாரம் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் தொடர்பில் மேன்முறையீடு செய்யும் முறையொன்று இல்லாததன் காரணமாக, மேன்முறையீடுகளை முன்வைத்து அப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு சட்ட ரீதியில் வாய்ப்பு எதுவும் இல்லை எனவும், அவ்வாறு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவிடின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சகல அரச கட்டமைப்புக்களினதும் அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணசபை பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்டசபைகளின் பிரதானிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எல்.ரி.பி.தெஹிதெனியவினால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
1996 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அனைத்து பிரதிவாதி தரப்புக்களும் கடமைப்பட்டுள்ளனர்.
அதேவேளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரால் பொதுநிர்வாக சுற்றறிக்கை ஊடாக சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணசபை பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்டசபைகளின் பிரதானிகள் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 15(7) ஆம் பிரிவுக்கு அமைய பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதியினுள் அப்பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு குறித்த நபரால் எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆணைக்குழுவுக்கு அறிக்கைப்படுத்தவேண்டிய கடப்பாடு உண்டு எனவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆணைக்குழுவினால் பரிந்துரைகள் வெளியிடப்பட்டதன் பின்னர் அவை நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் வினவும்போது, அதுகுறித்து மேன்முறையீடு செய்யப்பட்டிருப்பதன் காரணமாக அப்பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சில கட்டமைப்புக்கள் பதிலளித்துள்ளன.
இருப்பினும் மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் பிரகாரம் வழங்கப்படும் பரிந்துரைகள் தொடர்பில் மேன்முறையீடு செய்யும் முறையொன்று இல்லாததன் காரணமாக, மேன்முறையீடுகளை முன்வைத்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு சட்ட ரீதியில் வாய்ப்பு எதுவும் இல்லை என்பதை அனைத்துத் தரப்பினரும் அறிந்திருக்கவேண்டும்.
அதுமாத்திரமன்றி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிடின், அதற்கு எதிராக ஆணைக்குழுவினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் கட்டமைப்புக்கள் பொறுப்பேற்கவேண்டும் என்பதையும் அறியத்தருகிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





