வீட்டு வேலைத் துறையை முறையான தொழிலாக அங்கீகரிக்க அரசு நடவடிக்கை
தொழிலாளர் அமைச்சின் இத்தகைய புதிய முயற்சிகளுக்கு மத்தியில், இலங்கையில் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பாக தற்போதும் நடைமுறையில் உள்ள சட்டங்கள் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டவையாகும்.
வீட்டு வேலைகளை ஒரு முறையான வேலைத் துறையாக அங்கீகரித்து, தொழிலாளர் உரிமைகளை வலுப்படுத்துவதற்கான அடிப்படை நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தொழிலாளர் அமைச்சு விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2011 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்ட வீட்டு வேலைத் தொழிலாளர்கள் தொடர்பான 189 ஆம் இலக்க உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு வீட்டு வேலைத் தொழிலாளருக்கும் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வேலை என்ற தொனிப்பொருளின் கீழ் நேற்று சர்வதேச வீட்டு வேலைத் தொழிலாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றும் இலங்கை வீட்டு வேலைத் தொழிலாளர்கள், குழந்தைகளின் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் வீட்டு நிர்வாகம் போன்ற சேவைகளை வழங்குவதன் மூலம் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும், இலட்சக்கணக்கான மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்குப் பக்கபலமாக இருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இத்தகைய தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், நவீன மற்றும் உள்ளடக்கிய பணிச்சூழலை உருவாக்குவதற்காக சட்டங்களில் திருத்தங்களைப் பரிந்துரைக்கவும் தொழிலாளர் அமைச்சின் செயலாளரின் தலைமையில் நிபுணர் குழுவொன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தங்களின் பின்னர், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 189 ஆம் இலக்க உடன்படிக்கையில் இலங்கை கையொப்பமிட்டு அதனை அங்கீகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதுடன், இதன் மூலம் பாகுபாடு, சுரண்டல் மற்றும் வன்முறைகளற்ற பாதுகாப்பான பணிச்சூழல் உருவாக்கப்படும் என்றும் தொழிலாளர் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
தொழிலாளர் அமைச்சின் இத்தகைய புதிய முயற்சிகளுக்கு மத்தியில், இலங்கையில் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பாக தற்போதும் நடைமுறையில் உள்ள சட்டங்கள் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டவையாகும். உள்நாட்டில் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பாக இன்றும் நடைமுறையில் இருப்பது பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 1871 ஆம் ஆண்டின் வீட்டுப் பணியாளர் சட்டமும் (இது 1936 இல் திருத்தப்பட்டது), 1912 ஆம் ஆண்டின் சாரதிகள் சட்டமுமாகும்.
இத்துறை சார்ந்த புள்ளிவிபரங்களின்படி, இலங்கையில் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பாக இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டிலேயே அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அக்காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக நாட்டில் சுமார் 80,000 வீட்டுப் பணியாளர்கள் இருந்ததோடு, அவர்களுள் 66,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





