எதேச்சாதிகாரத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்
ஓர்பான் விட்டுச் சென்ற சிதைந்த நீதித்துறையும், அரசியல் மயப்படுத்தப்பட்ட பொலிஸ் படையும் ஒரு இரவில் மாறிவிடாது.
நவீன கால அரசியல் வரலாற்றில் 'எதேச்சாதிகாரம்' என்பது ஒரு புதிய மற்றும் நுணுக்கமான வடிவத்தைப் பெற்றுள்ளது. பழைய கால சர்வாதிகாரிகள் இராணுவ பலத்தால் ஆட்சியைப் பிடித்தார்கள் என்றால், நவீன எதேச்சாதிகாரிகள் ஜனநாயக வழியில், மக்களின் வாக்குகள் மூலமே ஆட்சிக்கு வருகிறார்கள்.
ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் அந்த ஜனநாயகத்தையே உள்ளிருந்து சிதைத்து, அதிகாரத்தைத் தனிநபரின் கைகளில் குவிக்கிறார்கள். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் ஹங்கேரியின் விக்டர் ஓர்பான்.
கடந்த 16 ஆண்டுகளாக அந்நாட்டை ஒரு தனிநபரின் விருப்பத்திற்கேற்ப வளைத்து ஆட்சி செய்தார். அண்மைய தேர்தல் முடிவுகள் அசைக்க முடியாதவர் என்று கருதப்பட்ட ஓர்பானின் பிம்பத்தைச் சுக்குநூறாகத் தகர்த்துள்ளன. இது உலகெங்கிலும் உள்ள எதேச்சாதிகாரிகளுக்கும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கும் மிக முக்கியமான படிப்பினையாகும்.
விக்டர் ஓர்பான் வெறும் ஆட்சியாளராக மட்டும் இருக்கவில்லை; அவர் அரசாங்கம் என்பதையே தனக்குச் சாதகமான முறையில் மீளமைக்க முனைந்தார். அவர் கையாண்ட முறையை அரசியல் ஆய்வாளர்கள் 'நிர்வாக எதேச்சாதிகாரம்' என்று அழைக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் அவர் செய்த முதல் காரியம் அரசியல் யாப்பைத் திருத்தி எழுதியதுதான். இதன் மூலம் தேர்தல் விதிகளைத் தனது கட்சிக்குச் சாதகமாக மாற்றினார்.
நீதித்துறையில் இருந்த சுதந்திரமான நீதிபதிகளை அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடங்களைத் தனது விசுவாசிகளால் நிரப்பினார். இதன் விளைவாக, அரசாங்கத்தின் தவறுகளைக் கேள்வி கேட்கும் நீதித்துறை அதிகாரம் முடக்கப்பட்டது.
அடுத்ததாக, அவர் ஊடகங்களின் மீது தனது பிடியைச் செலுத்தினார். ஹங்கேரியின் தேசிய ஊடகங்கள் அனைத்தும் அவரது கட்சியின் ஊதுகுழல்களாக மாற்றப்பட்டன. சுயாதீன ஊடகங்கள் விளம்பரங்கள் மறுக்கப்பட்டும், சட்ட நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டும் முடக்கப்பட்டன.
டொனால்ட் ட்ரம்பின் மகா இயக்கத்தினர் உட்பட உலகெங்கிலும் உள்ள வலதுசாரித் தலைவர்கள் இவரை ஒரு 'ஆதர்ச நாயகனாக' நோக்கி வந்தனர். லிபரல் ஜனநாயகத்தை அதன் ஆன்மாவிலிருந்து பிரித்து, வெற்றுக் கூடாக மாற்றிய போதிலும், மக்கள் ஆதரவு எனும் கவசத்தால் ஓர்பான் பாதுகாக்கப்பட்டார்.
ஆனால், ஹங்கேரிய மக்கள் அண்மையில் வழங்கிய தீர்ப்பு, எந்தவொரு மாயையும் காலாவதித் திகதியைக் கொண்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஓர்பானின் வீழ்ச்சியில் மிகவும் சுவாரஸ்யமான அம்சம் யாதெனில், அவரை வீழ்த்தியவர் ஒரு காலத்தில் அவரது நெருங்கிய வட்டத்திற்குள் இருந்த விசுவாசியான பீற்றர் மக்யார் ஆவார்.
ஓர்பானின் நிர்வாக முறைமைக்குள் இருந்து கொண்டு அதன் ஊழல்களையும், ஜனநாயகச் சிதைவுகளையும் நேரடியாகக் கண்டவர் மக்யார். அவர் உருவாக்கிய 'திஸ்ஸா' கட்சி, சிதறிக்கிடந்த எதிர்க்கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தது. ஒரு எதேச்சாதிகாரியை வீழ்த்த வேண்டுமானால், வெறும் விமர்சனங்கள் மட்டும் போதாது, அந்த அதிகார மையத்திற்கு இணையான அல்லது அதைவிட வலிமையான மாற்றாகத் திகழ வேண்டும் என்பதை மக்யார் நிரூபித்துள்ளார்.
ஓர்பானின் வீழ்ச்சி புகட்டும் முதல் பாடம், வெறும் கலாசார யுத்தங்களால் மக்களின் பசியைத் தீர்க்க முடியாது என்பதாகும்.
ஓர்பான் கையாண்ட தந்திரோபாயம் மிகவும் எளிமையானதுஇ சிறுபான்மையினரை அச்சுறுத்தலாகச் சித்தரிப்பதும், மத அடையாளத்தை அரசியல் கேடயமாகப் பயன்படுத்துவதும் ஆகும்.
ஐரோப்பிய ஒன்றியம் அவரது ஊழலை விமர்சித்தபோது, அதனைத் தான் ஒரு கிறிஸ்தவர் என்பதால் வரும் தாக்குதலாக சித்தரித்து, 'புனித யுத்த' மாயையை உருவாக்கினார்.
அகதிகள் விவகாரத்தில் இனவாதத்தைத் தூண்டி, விமர்சிப்பவர்களைத் தேசத்துரோகிகளாக முத்திரை குத்தினார். 'ஹங்கேரியின் ஆன்மா நானே' என்ற பிம்பத்தை அவர் கட்டமைத்தார்.
ஆனால், இத்தகைய உணர்ச்சிவசப்படும் கோசங்கள் மக்களின் உண்மையான வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை. ஆளும் வர்க்கத்தினர் செல்வாக்கு பெற்று வளரும்போது, சாதாரண மக்களின் ஊதியங்கள் முடங்கியதும், சுகாதாரச் சேவைகள் சீர்குலைந்ததும் யதார்த்தத்தை உணர வைத்தன.
உலக அரங்கில் விக்டர் ஓர்பான் ஒரு குழப்பவாதியாகவே பார்க்கப்பட்டார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின்போது புட்டீனுக்கு ஆதரவாக நின்றமை, உக்ரைனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவிகளைத் தடுத்தமை என்று அவரது நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டின் நலனை விட, அவரது தனிப்பட்ட நலன்களையும் சர்வதேச கூட்டாளிகளையும் திருப்திப்படுத்துவதாகவே அமைந்தன.
ஒரு தலைவர் தனது நாட்டின் அல்லது பிராந்தியத்தின் நலன்களைப் பொருட்படுத்தாமல் செயற்படும்போது, அவர் உள்நாட்டிலேயே தனது தார்மீக ஆதரவை இழக்க நேரிடும் என்பதற்கு ஓர்பான் ஒரு நேரடி உதாரணமாகிறார்.
ஓர்பான் தொடர்ந்து வெற்றி பெற்றதற்குக் காரணம் அவரது செல்வாக்கு மட்டுமல்ல, அவருக்கு எதிரான வாக்குகள் பல சிறு கட்சிகளிடையே சிதறிக் கிடந்ததுதான்.
இதற்கு முன் நடந்த தேர்தல்களில், 60 சதவீத மக்கள் அவருக்கு எதிராக இருந்தபோதிலும், அந்த வாக்குகள் லிபரல், சோஷலிச மற்றும் பசுமைக் கட்சிகளிடையே பிரிந்து சென்றதால் ஓர்பான் எளிதாக வென்றார். ஆனால், பீற்றர் மக்யார் செய்த மிகப்பெரிய சாதனை, இந்தச் சிதறிய வாக்குகளை ஒருங்கிணைத்ததுதான்.
ஓர்பானின் வீழ்ச்சி ஒரு ஜனநாயகத் தோல்வி என்றால், வரலாற்றில் பல சர்வாதிகாரிகள் மிகக் கொடூரமான முடிவுகளைச் சந்தித்துள்ளனர். அதிகாரம் ஒரு புள்ளியில் குவியும்போது, அது வீழ்ச்சியடையும் வேகமும் அதிகமாகவே இருக்கும்.
இத்தாலியின் பெனிட்டோ முசோலினி தீவிர தேசியவாதத்தைப் பேசிய அவர், இரண்டாம் உலகப் போரின் இறுதியில் தனது சொந்த மக்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் மிலான் நகரின் வீதியில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டது.
பிலிப்பைன்ஸின் பெர்டினாண்ட் மார்க்கோஸ் ஊழல் மற்றும் அதிகாரக் குவிப்பின் உச்சத்தில் இருந்த இவர், 'மக்கள் சக்தி புரட்சி' மூலம் நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டார். பல பில்லியன் டொலர் ஊழல் புகார்கள் இன்றும் அவரது குடும்பத்தின் பெயரில் உள்ளன.
லிபியாவின் முஅம்மர் கடாபி 40 ஆண்டுகால இரும்புப்பிடி ஆட்சியை நடத்திய நிலையில் 2011 அரபு வசந்தப் புரட்சியின் போது ஒரு சாக்கடைக் குழாய்க்குள் ஒளிந்திருந்த நிலையில் பிடிபட்டு, கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார்.
இலங்கையில் நடைபெற்ற 'அரகலய' போராட்டம் ஒரு குடும்பம் நாட்டின் அதிகாரத்தையும் பொருளாதாரத்தையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முனைந்தபோது, மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடி, அந்த ஆட்சியாளர்களை நாட்டை விட்டு ஓடச் செய்தது.
அந்த வகையில் ஓர்பான் விட்டுச் சென்ற சிதைந்த நீதித்துறையும், அரசியல் மயப்படுத்தப்பட்ட பொலிஸ் படையும் ஒரு இரவில் மாறிவிடாது.
எதேச்சாதிகாரிகள் தாங்கள் நிரந்தரமாக நீடிக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கிய கட்டமைப்புகள் மாற்றப்படுவதற்கு நீண்ட காலம் எடுக்கும். ஆனால், இத்தகைய 'ஓர்பான் மொடல்' இனி வெற்றி பெறாது என்பது ஹங்கேரியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.





