வார இறுதி நாட்களிலும் தடையின்றி எரிபொருள் விநியோகம் இடம்பெறும் - பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
மாற்றிக் கொள்ளப்பட்ட 10 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்களுக்கு புதிய குறியீடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் முற்றாக மூடப்படும் என போலி செய்திகள் பகிரப்படுகின்றன. வழமையைப் போன்று எவ்வித தடைகளும் இன்றி வார இறுதி நாட்களிலும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.
கொழும்பில் 20-03-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் முற்றாக மூடப்படும் என போலி செய்திகள் பகிரப்படுகின்றன. இவ்வாறான நெருக்கடிகள் அற்ற சாதாரண சூழலின் போதும், மாதத்தில் ஒரு சனிக்கிழமை எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்படும். அதனை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறானதொரு செய்தி பகிரப்படுகிறது. எவ்வாறிருப்பினும் இன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட மாட்டாது.
தேவையேற்படின் ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான எரிபொருளை வழங்குவதிலும் எவ்வித சிக்கலும் இல்லை. எரிபொருள் களஞ்சிய முனைங்களும் மூடப்பட மாட்டாது. கியூ.ஆர் முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாற்றிக் கொள்ளப்பட்ட 10 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்களுக்கு புதிய குறியீடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மிகச் சிறிய தொழிநுட்ப சிக்கல்கள் மாத்திரமே காணப்படுகின்றன. அவையும் உடனுக்குடன் சரி செய்யப்படுகின்றன.
எரிபொருள் விநியோகத்தர்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேவையான எரிபொருள் தொகையை முற்பதிவு செய்ய முடியும். எனவே வார இறுதி நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தொழிற்சாலைத்துறைக்கு தேவையான எரிபொருட்களும் எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படும். மக்களை அசௌகரியத்துக்கு உட்படுத்தாத வகையில் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என உறுதியளிக்கின்றோம் என்றார்.





