மின்சார பொறியியலாளர் சங்கம் அமைச்சருக்கு அவசர கடிதம்
25 தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழியப்பட்ட 'கூட்டு ஒப்பந்தத்தின்' சரத்துக்கள் தொடர்பாக, புதிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உரிய கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டின் மின்சாரக் கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும், தொழிற்சங்க முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்கப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பிலும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் வலுசக்தி அமைச்சருக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மின்சார சபையை மறுசீரமைக்கும்போது ஊழியர்கள் இதுவரை அனுபவித்து வந்த வரப்பிரசாதங்கள் எக்காரணம் கொண்டும் குறைக்கப்படக் கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..இவ்வாறானதொரு பின்னணியில் ஊழியர்களின் உரிமைகளைக் கடுமையாக மீறும் வகையில் அவர்களைப் புதிய நிறுவனங்களுடன் இணைக்கத் தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோல், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், 09-03-2026அன்று முதல் 25 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்க நேரிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 25 தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழியப்பட்ட 'கூட்டு ஒப்பந்தத்தின்' சரத்துக்கள் தொடர்பாக, புதிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உரிய கவனம் செலுத்த வேண்டும்.
புதிய நிறுவனங்களின் பணிப்பாளர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஓரளவுக்கு சாதகமான நிலையில் நிறைவடைந்ததோடு, இணக்கப்பாட்டிற்கு வர முடியாத விடயங்கள் குறித்து வலுவக்தி அமைச்சருடன் கலந்துரையாடி இறுதி முடிவுகளை அறிவிக்க நான்கு நிறுவனங்களின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.





