சர்வதேச தலையீடற்ற உள்ளகப்பொறிமுறையை ஏற்றுக்கொள்கின்றோம்: ஐ.நாவில் இலங்கை
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதம் கைச்சாத்திடப்பட்டது.
இன்னமும் தீர்வுகாணப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் உள்ளகக்கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருப்பதுடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்த ஆராயப்பட்டுவருவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டிய ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுமித் தஸநாயக்க, உள்ளகப்பொறிமுறைகள் ஊடாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான தமது கடப்பாடு தொடர்வதாகத் தெரிவித்தார்.
ஜெனிவாவில் கடந்த திங்கட்கிழமை (23) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடரில் ஓரங்கமாக 25-02-2026 அன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இலங்கை சார்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சுமித் தஸநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
துடிப்பான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு ஜனநாயகக்கோட்பாடுகள், நேர்மையான ஆட்சியியல் நிர்வாகம், மனித உரிமைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்பவற்றை உறுதிப்படுத்தி, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமாற்றத்தை அடைவதை நோக்கிய இலங்கையின் பயணம் தொடர்கிறது.
இலங்கை கடந்த காலங்களில் முகங்கொடுக்கநேர்ந்த மிகமோசமான பொருளாதார மற்றும் சமூக ரீதியான நெருக்கடிகளிலிருந்து கடினமானதும், இருப்பினும் மிக அவசியமான மறுசீரமைப்புக்கள் மூலம் படிப்படியாக மீட்சியடைந்துவருகிறது. இந்நிலையில் அபிவிருத்தியின் நன்மைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பன நாட்டின் சகல சமூகப்பிரிவினரையும் சென்றடைவதையும், சகலரையும் உள்ளடக்கிய நியாயமான வளர்ச்சி மற்றும் சமூகப்பாதுகாப்பு என்பவற்றையும் உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' எனும் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதேபோன்று டிஜிட்டல் நிலைமாற்றம், வெளிப்படைத்தன்மை மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துகொள்வதில் இலங்கை வலுவாக முன்னேற்றமடைந்த வேளையில், கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியினால் மீண்டும் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்கநேர்ந்தது. அவ்வேளையில் உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கி, இலங்கையுடனான உடன்நிற்பை வெளிப்படுத்திய ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்துக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். அதேவேளை இந்த நெருக்கடியானது காலநிலையுடன் தொடர்புடைய மனிதாபிமான சவால்களைக் கையாள்வதில் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது.
அதேபோன்று நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்பன இலங்கையின் முன்னுரிமைக்குரிய விடயங்களாகக் காணப்படுகின்றன. நாம் சகல விதங்களிலுமான ஒடுக்குமுறைகளையும் புறந்தள்ளக்கூடிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறோம்.
மேலும் கடந்தகால சம்பவங்களை உரியவாறு கையாள்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் உள்ளகக் கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய கட்டமைப்புக்களுக்கு அவசியமான போதிய மனித மற்றும் நிதி வளங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதன் ஊடாக அக்கட்டமைப்புக்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு சகல சமூகங்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிப்பது குறித்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்ட பயங்கரவாத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து பொதுமக்களிடம் கருத்தறியும் செயன்முறை தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், அவ்வாறு கிடைக்கப்பெறும் முன்மொழிவுகள் வரைவில் உள்வாங்கப்படல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படுவதற்கு வழிகோலும்.
மேலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதம் கைச்சாத்திடப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் தேசிய ரீதியிலான பொறிமுறைகள் மற்றும் ஆக்கபூர்வமான சர்வதேச ஒத்துழைப்புக்கள் மூலம் மேலும் பலப்படுத்தப்பட்ட உள்ளகக் கட்டமைப்புக்கள் ஊடாக மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கையின் நீண்டகாலக் கடப்பாடு தொடர்கிறது. இறுதியாக நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின்போது இலங்கை வெளியகத் தலையீட்டை எதிர்த்த அதேவேளை, நாட்டுமக்களின் மனித உரிமைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவதற்கான கடப்பாட்டை மீளுறுதிப்படுத்தியது.
உள்ளகப்பொறிமுறைகள் ஊடாக நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதையும், மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதையும் நோக்கி நகரும் இவ்வேளையில், சர்வதேச சமூகத்தின் புரிந்துணர்வையும், ஊக்குவிப்பையும், ஆதரவையும் பெரிதும் வரவேற்கிறோம் எனத் தெரிவித்தார்.





