தமிழக வெற்றிக்கழகத்தின் எழுச்சியும் திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சியும்
திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சி என்பது ஒரு பாடமாக அமைய வேண்டும்;. மக்கள் அதிகாரத்தை வழங்கினால் அதைச் சரியாகப் பயன்படுத்த தவறினால், வரலாறு யாரையும் மன்னிக்காது என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவே சாட்சியாகும்.
தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ஆம் ஆண்டு என்பது வெறும் தேர்தல் ஆண்டு மட்டுமல்ல, அது அரை நூற்றாண்டு கால இரு துருவ அரசியலின் அஸ்தமனத்தையும், புதிய அரசியல் விடியலின் உதயத்தையும் குறிக்கும் வரலாற்றுத் திருப்புமுனையாகும்.
1967இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல், தமிழகம் திராவிட சித்தாந்தங்களின் கோட்டையாகவே விளங்கி வந்தது.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு பெரும் இயக்கங்களும் மாறிமாறி ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டன. சமூக நீதி, மாநில சுயாட்சி மற்றும் மொழிப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக்கொண்டு இந்த இயக்கங்கள் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றாலும், காலப்போக்கில் ஏற்பட்ட நிர்வாகத் தேக்கம், ஊழல் புகார்கள் மற்றும் வாரிசு அரசியலின் பிடி போன்றவை மக்களிடையே ஒருவிதமான சலிப்பை ஏற்படுத்தின.
இந்தச் சலிப்புணர்வின் உச்சக்கட்டத்தில், மாற்றத்தை வேண்டி நின்ற தமிழக மக்களின் நம்பிக்கைப் பாத்திரமாக, தமிழ்த் திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய விஜய்; 'தமிழக வெற்றிக் கழகம்' (த.வெ.க) என்ற இயக்கத்தைத் தொடங்கி, அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பது எழுச்சியான அரசியல் புரட்சியாகும்.
இந்த எழுச்சியானது, 1972இல் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வைத் தொடங்கி 1977இல் நிகழ்த்திய அதே வரலாற்றுச் சாதனையுடன் நேரடியாக ஒப்பிடத்தக்கதாகவே காணப்படுகின்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி என்பது தற்செயலாக நிகழ்ந்த ஒன்றல்ல. இது மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட நீண்டகாலப் பயணத்தின் விளைவாகும்.
கடந்த பத்தாண்டுகளாக விஜய் தனது ரசிகர் மன்றங்களை 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் சமூக நலப் பணிகளில் ஈடுபடுத்தி, அடித்தட்டு மக்களுடனான தொடர்பை வலுப்படுத்தினார்.
கல்வி ஊக்கத்தொகை வழங்குதல், விலையில்லா விருந்தகம் மற்றும் பேரிடர் காலங்களில் களப்பணி ஆற்றுதல் என்று அவர் மேற்கொண்ட செயற்பாடுகள், அவரை வெறும் திரைப் பிம்பமாக அல்லாமல் ஒரு மக்கள் தலைவராக அடையாளப்படுத்தின.
இதன் தொடர்ச்சியாக விக்ரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநில மாநாடு, தமிழக அரசியலில் ஒரு புதிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
அந்த மாநாட்டில் விஜய் முன்வைத்த 'மதச்சார்பற்ற சமூக நீதி' மற்றும் 'நிர்வாகச் சீர்திருத்தம்' என்ற முழக்கங்கள், திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய வாக்கு வங்கியை அசைத்துப் பார்த்தன.
குறிப்பாக, திராவிடக் கட்சிகள் 'திராவிட மாடல்' மற்றும் 'சமூக நீதி' என்ற வார்த்தைகளைத் தங்களின் தற்காப்பு அரணாகப் பயன்படுத்திய வேளையில், விஜய் அதே கொள்கைகளை இன்னும் வீரியமாகவும், தூய்மையாகவும் முன்வைத்த விதம் மக்களைக் கவர்ந்தது.
எம்.ஜி.ஆர். தனது திரைப்படங்களின் வழியாக ஒரு 'ஏழைப் பங்காளன்' மற்றும் 'சமூக நீதி வீரன்' என்ற பிம்பத்தைக் கட்டமைத்திருந்தார். அதேபோல், விஜய் தனது சமீபத்திய திரைப்படங்களான 'கத்தி', 'மெர்சல்', 'சர்க்கார்' போன்றவற்றின் மூலம் தனியார்துறை ஆதிக்கம், சுகாதாரத்துறை ஊழல் மற்றும் தேர்தல் முறைகேடுகள் போன்றவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்து, இளைஞர்களின் அரசியல் உணர்ச்சியைத் தூண்டினார்.
எம்.ஜி.ஆருக்குப் பெண்களின் ஆதரவு எப்படி பெரும் பலமாக இருந்ததோ, அதேபோல் விஜய்க்கு இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு பெரும் சக்தியாக அமைந்தது.
1977இல் கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் போன்ற ஜாம்பவான்களை எதிர்த்து எம்.ஜி.ஆர். எப்படித் தனித்து நின்று வென்றாரோ, அதேபோல் தற்போது தமிழகத்தின் ஆளுமை மிக்க தலைவர்களையும், பலமான கட்சி இயந்திரங்களையும் எதிர்த்து விஜய் வெற்றி பெற்றிருப்பது அவரது தனிப்பட்ட ஆளுமைக்கும், மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கைக்குமான சான்றாகும்.
திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய்ந்தால், அவை தங்களின் அடிப்படை விழுமியங்களிலிருந்து விலகி, அதிகாரக் குவியல்களாக மாறியதைக் காண முடிகிறது. வாரிசு அரசியல் மிகப்பெரிய விமர்சனமாக உருவெடுத்தது, இது தகுதியுள்ள சாதாரணத் தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
திராவிடக் கட்சிகள் நீண்ட காலமாக இலவசங்களை முன்னிறுத்தி வாக்குகளைப் பெற்று வந்த நிலையில், விஜய் தற்சார்பு பொருளாதாரம் மற்றும் தரமான அடிப்படை வசதிகளை முன்னிறுத்தினார். இது இளைஞர்களிடையே புதிய கனவை விதைத்தது.
மேலும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே ஊழல் புகார்களில் சிக்கியிருந்ததும், மத்திய அரசுடனான உறவில் மாநில உரிமைகளைத் தற்காப்பதில் ஏற்பட்ட தொய்வுகளும் த.வெ.க.வின் வளர்ச்சிக்கு உரமிட்டன.
விஜய் தனது பிரசாரங்களில், தானொரு 'புதிய அரசியல் பண்பாட்டை' உருவாக்கப் போவதாகக் கூறினார். மாற்றுக் கட்சியினரைத் தரக்குறைவாகப் பேசாமல், கொள்கை ரீதியான விமர்சனங்களை முன்வைத்த அவரது கண்ணியமான அரசியல் அணுகுமுறை, தமிழகத்தில் நிலவி வந்த 'வசவு அரசியல்' கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இது கல்வியறிவு பெற்ற இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களைப் பெருமளவில் ஈர்த்தது. திராவிடக் கட்சிகள் தங்களது வீழ்ச்சியைத் தடுக்க எவ்வளவோ முயன்றும், காலத்தின் கட்டாயமான 'மாற்றம்' என்ற அலையை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு, முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் விஜய்யின் முன்னால் உள்ள சவால்கள் மிகப்பெரியவை. 50 ஆண்டு கால திராவிட ஆட்சியின் எச்சங்களைச் சீரமைப்பதும், தமிழகத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவதும் சாதாரண காரியமல்ல.
இருப்பினும், எம்.ஜி.ஆர். எப்படித் தனது ஆட்சிக் காலத்தில் சத்துணவுத் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் மூலம் ஏழை எளிய மக்களின் இதயங்களில் இடம்பிடித்தாரோ, அதேபோல் விஜய்யும் தனது நிர்வாகத் திறமையால் புதிய திட்டங்களைச் செயற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி என்பது வெறும் ஒரு கட்சியின் வெற்றி மட்டுமல்ல, அது தமிழக மக்களின் அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடாகும்.
மக்கள் இனி 'சின்னங்களைப் பார்த்து வாக்களிக்கமாட்டார்கள், செயற்பாடுகளைப் பார்த்துத்தான் வாக்களிப்பார்கள்' என்ற செய்தியை இந்தத் தேர்தல் முடிவு உரக்கச் சொல்லியுள்ளது.
திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சி என்பது ஒரு பாடமாக அமைய வேண்டும்;. மக்கள் அதிகாரத்தை வழங்கினால் அதைச் சரியாகப் பயன்படுத்த தவறினால், வரலாறு யாரையும் மன்னிக்காது என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவே சாட்சியாகும்.
எம்.ஜி.ஆரின் காலத்திற்குப் பிறகு தமிழகம் கண்ட மிகச்சிறந்த எழுச்சியாக விஜய்யின் வெற்றி வரலாற்றில் பொறிக்கப்படும். 'மக்களே நாட்டின் எஜமானர்கள்' என்பதைத் தனது ஒவ்வொரு செயற்பாட்டிலும் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு இப்போது முதல்வர் விஜய் வசம் உள்ளது.
தமிழகத்தின் இந்த புதிய விடியல், இந்திய அரசியலுக்கே முன்னோடியாகவும், இளைஞர்களுக்கு உத்வேகமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. திராவிடப் பேரியக்கங்களின் வீழ்ச்சியும், தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியும் தமிழக வரலாற்றின் புதிய அத்தியாயமாகும். இது தமிழ் நாட்டை வளர்ச்சி, சமத்துவத்தின் உச்சத்திற்குக் கொண்டு செல்லுமென எதிர்பார்க்கலாம்.





