கடற்சார் பயிற்சிகளை வழங்குவதற்காக இலங்கை வரும் இந்திய கடற்படை கப்பல்
திருகோணமலை துறைமுகத்தில் தங்கியிருக்கும் போது, இலங்கை கடற்படையின் 03 அதிகாரிகள் மற்றும் 25 பயிற்சி அதிகாரிகளை இக்கப்பல் ஏற்றிச் செல்லும்.
நட்புறவு பாலங்களை அமைக்கும் இந்திய கடற்படையின் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையின் பயிற்சி கப்பலான ஐ.என்.எஸ் தரங்கிணி, இலங்கை கடற்படை பயிற்சி அதிகாரிகளுக்கு துறைமுகம் மற்றும் கடல்சார் பயிற்சிகளை வழங்குவதற்காக நாளை வெள்ளிக்கிழமை திருகோணமலை துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
மார்ச் 2 வரை திருகோணமலை துறைமுகத்திலும், மார்ச் 6 - 9 வரை கொழும்பு துறைமுகத்திலும் இப்பயிற்சிகள் இடம்பெறவுள்ளன. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்ற பிறகு, இக்கப்பல் தனது திரும்புதலின் போது இலங்கை வருகிறது.
இக்கப்பல் கமாண்டர் நிதின் கஜ்ஜார் தலைமையில் இயங்குகிறது. இயந்திரங்கள் மற்றும் எரிவாயு விசையாழிகள் நிறைந்த இந்த நவீன காலத்தில், உலகின் ஒரு சில கடற்படைகள் மட்டுமே இத்தகைய பாய்மரப் பயிற்சி கப்பல்களை இயக்குகின்றன.
திருகோணமலை துறைமுகத்தில் தங்கியிருக்கும் போது, இலங்கை கடற்படையின் 03 அதிகாரிகள் மற்றும் 25 பயிற்சி அதிகாரிகளை இக்கப்பல் ஏற்றிச் செல்லும். கொழும்பு நோக்கிய பயணத்தின் போது அவர்களுக்கு கடல்சார் பயிற்சி மற்றும் அனுபவம் வழங்கப்படும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.





