இளைஞர்களின் குற்றவியல் குற்ற நடத்தைகள் 10 ஆண்டுகளில் 200 சதவீதத்தால் அதிகரிப்பு
சிறைச்சாலைகளில் அரசியல்வாதிகளுக்கோ அல்லது வேறு நபர்களுக்கோ எவ்வித விசேட சலுகைகளும் வழங்கப்படக் கூடாது.
இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் 16 தொடக்கம் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே குற்றவியல் குற்ற நடத்தைகள் சுமார் 200 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இந்நிலை தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் சிறைச்சாலைகள் இளைஞர்களால் நிரம்பி வழியக் கூடிய நிலை ஏற்படாம் என மனநல மருத்துவ நிபுணர் தாரக பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.
அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தில் 26-01-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் 16 தொடக்கம் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே குற்றவியல் குற்ற நடத்தைகள் சுமார் 200 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது மிகவும் பாரதூரமான ஒரு நிலைமை எனச் சுட்டிக்காட்டுகிறது. இந்நிலை தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் சிறைச்சாலைகள் இளைஞர்களால் நிரம்பி வழியக் கூடிய நிலை ஏற்படாம். இதனைத் தடுக்க உடனடித் அரசியல் தலையீடுகள் அவசியம். குற்றவாளிகளைச் சமூகத்தில் வீரர்களாகச் சித்தரிக்கும் போக்கைக் முழுமையாக கைவிட வேண்டும்.
சிறைச்சாலைகளில் அரசியல்வாதிகளுக்கோ அல்லது வேறு நபர்களுக்கோ எவ்வித விசேட சலுகைகளும் வழங்கப்படக் கூடாது. இலங்கையின் மனநலக் கட்டளைச் சட்டம் 100 ஆண்டுகள் பழமையானது. இத்தகைய காலாவதியான சட்டத்தைக் கொண்டு தற்கால மனநலப் பிரச்சினைகளைக் கையாள்வது கடினமான வியமாகும். அத்துடன், நாட்டில் 5 - 8 சதவீதமான ஓரினச் சேர்க்கையாளர்கள் வாழ்வதுடன் அவர்களை தாழ்வாகக் கருதுவதை நிறுத்த வேண்டும். சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னரும் உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் அங்கொடை வைத்தியசாலையில் தங்கியிருக்கும் சுமார் 500 பேரைச் சமூக சேவைத் திணைக்களம் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
இதேவேளை விசேட வைத்திய நிபுணர் சேனானி விஜேதுங்க குறிப்பிடுகையில், பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதன் காரணமாக, அவர்கள் சிறு வயதிலேயே மனநோயாளிகளாக மாறும் அபாயம் காணப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன என்றார். மேலும் நாட்டில் மனநல விசேட வைத்தியர்களுக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால், தற்போது பணியில் உள்ள வைத்தியர்களின் சேவையை ழுமுமையாக பெற்றுக்கொள்ளும் நோக்கில் தொலைதூர மருத்துவம்முறையைப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது போதைப்பொருள் பாவனை காரணமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அவ்வாறான நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கத் தனி நோயாளர் தங்கும் அறைகளை அமைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என விசேட வைத்திய நிபுணர் புஷ்பா ரணசிங்க தெரிவித்தார்.





