நெருக்கடிகளுக்கு சுகாதார அமைச்சின் முறையற்ற முகாமைத்துவதே காரணம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
விசேட வைத்தியர்கள் மற்றும் தரநிலை வைத்தியர்களுக்கான போக்குவரத்து உள்ளிட்ட பிரத்தியேக சம்பள அதிகரிப்பு மேலதிக நேரக் கொடுப்பனவை நிலையானதாக மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் உபகரண பற்றாக்குறை உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு சுகாதார அமைச்சின் முறையற்ற முகாமைத்துவமே காரணம். வைத்தியர்கள் எவ்வித அரசியல் உள்நோக்கமுமின்றி, இலவச சுகாதார சேவையைப் பாதுகாக்கும் நோக்குடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்க செயளார் வைத்தியர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.
வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் 26-01-2026 அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் சுகாதார அமைச்சுக்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளைச் செயற்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதால், ஜனவரி 26 ஆம் திகதி காலை 8 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. விசேட வைத்தியர்கள் மற்றும் தரநிலை வைத்தியர்களுக்கான போக்குவரத்து உள்ளிட்ட பிரத்தியேக சம்பள அதிகரிப்பு மேலதிக நேரக் கொடுப்பனவை நிலையானதாக மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஐந்து முக்கிய தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவும் போது, மருந்துகளைக் கொள்வனவு செய்ய பரிந்துரைத்து மருந்துக் குறிப்புகளை வைத்தியர்கள் வழங்கமாட்டார்கள். தனியார் ஆய்வகங்களில் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நோயாளிகளுக்குப் பரிந்துரை வழங்கப்பட மாட்டாது. மேலும், உரிய அங்கீகாரமின்றி ஆரம்பிக்கப்படும் புதிய அலகுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதிருத்தல், அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படும் மருத்துவ முகாம்களைப் புறக்கணித்தல் மற்றும் நோயாளிகளின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படாத இடங்களில் சிகிச்சைகளைத் தவிர்த்தல் ஆகிய நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளால் நோயாளார் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்படுமாயின், அதற்குச் சுகாதார அமைச்சும் அதிகாரிகளுமே பொறுப்பேற்க வேண்டும். வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் உபகரணப் பற்றாக்குறைக்கு உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு சுகாதார அமைச்சின் முறையற்ற முகாமைத்துவமே காரணம். வைத்தியர்கள் எவ்வித அரசியல் உள்நோக்கமுமின்றி, இலவச சுகாதார சேவையை பாதுகாக்கும் நோக்குடன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும், அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படும் என்றும், அரசாங்கம் முறையான தீர்வை வழங்கும் பட்சத்தில் எந்த நேரத்திலும் போராட்டத்தை கைவிட தயாராக உள்ளோம் என்றார்.





