எம்.சீ.சீ. திட்டத்துக்கு இடமளித்திருந்தால் தற்போது பிரச்சினையே இல்லை: வஜிர
அமெரிக்கா இலங்கைக்கு எம்.சீ.சீீ ஊடாக நன்கொடை வழங்கும்போது இலங்கை எவ்வாறு செயற்பட்டது என டொனல்ட் டிரம்புக்கு தெரியும்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்து அமெரிக்காவின் எம்.சீ.சீ. திட்டத்த நாட்டுக்கு கொண்டுவந்து அதன் மூலம் 415 பில்லியன் டாெலரை நன்கொடையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துவந்தார். இந்த திட்டத்தை செயற்படுத்த நாட்டு மக்கள் அன்று இடமளித்திருந்தால், ஆசியாவிலே வரி நிவாரணம் கிடைக்கும் முதலாவது நாடாக இலங்கை தெரிவாகி இருக்கும். அமெரிக்காவின் தீர்வை வரி அதிகரிப்பும் எமக்கு பிரச்சினையாகி இருக்காது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியால் அதிகரிக்கப்பட்டுள்ள தீர்வை வரி அதிகரிப்பு தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமெரிகக ஜனாதிபதியினால் விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி தொடர்பில் இலங்கை மக்கள் மிகவும் புரிதலுடன் செயற்பட வேண்டும். இந்த எச்சரிக்கை தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவுக்க வரலாறு பூராகவும் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார். அதனால்தான் அவர் 2015 ஆட்சி காலத்தின் போதும் அதற்குப் பிறகும் மில்லேனியம் செலஞ்ச் கார்ப்பரேஷன் திட்டத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்த முயன்றார். எனது நினைவின் பிரகாரம், அமெரிக்காவிலிருந்து 415 பில்லியன் டாெலரை நன்கொடையாக பெற்றுக்கொள்ள ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துவந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் இருந்த பல்வேறு குழுக்கள் செயற்பட்ட விதம் தொடர்பில் இலங்கை மக்கள் மீள நினைத்துப்பார்க்க வேண்டும். ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் செயற்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த விடயத்தில் செயற்படுத்த நாட்டு மக்கள் இடமளித்திருந்தால், ஆசியாவிலே வரி நிவாரணம் கிடைக்கும் முதலாவது நாடாக இலங்கை தெரிவாகி இருக்கும்.
அமெரிக்காவின் வரி விதிப்பு, நூற்றுக்கு 44 வீதத்தில் இருந்து 30வீதம் வரை குறைந்திருப்பதாக பலவரும் தெரிவிக்கின்றனர்.இது வெட்கப்பட வேண்டிய விடயம் என்றே நான் தெரிவிக்கிறேன். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நேரகாலத்துடன் சர்வதேசத்தின் நடவடிக்கைகளை புரிந்துகொள்ள முடியுமான அரச தலைவர்கள் நாட்டை நிர்வகிப்பது முக்கியமாகும். இப்போது நாங்கள் எதை பேசினாலும் பிரயோசனம் இல்லை. ஏனெனில் அமெரிக்கா இலங்கைக்கு எம்.சீ.சீீ ஊடாக நன்கொடை வழங்கும்போது இலங்கை எவ்வாறு செயற்பட்டது என டொனல்ட் டிரம்புக்கு தெரியும்.
அமெரிக்காவின் இந்த நன்கொடையை பெற்றுக்கொள்ளும்போது சிலர் அநுராதபுரத்துக்கு செல்ல, திருகோணமலைக்கு செல்ல விசா எடுக்க வேண்டி ஏற்படும் என்றார்கள்.இவ்வாறு நாட்டொன்றை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. இப்போது அதன் நட்டத்தை ஒட்டுமொத்த இலங்கை மக்களும் அனுபவித்து வருகின்றனர்.
உண்மையில் இது கலந்துரையாடுவதற்கு இருந்த விடயம் ஒன்று அல்ல. இந்த விடயத்தை முன்கூட்டியே ரணில் விக்ரமசிங்க கண்டுகொண்டதால் உலக அரசியல், அவ்வாறு இல்லாவிட்டால் ஆசியாவின் அரசியல் தொடர்பில் தெளிவு இருப்பதால்தான் அவர் நேரகாலத்துடன் தயாராகுவதற்கு முயறி்சித்தார். என்றாலும் அதற்கு இடமளிக்கவில்லை. அந்த நடவடிக்கையை இல்லாமலாக்கினார்கள். தற்போது சிறிய, சிறிய கலந்துரையாடல்கள் மூலமாவது மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கிறது. இதனை முதலாவது சந்தர்ப்பத்திலே செயற்படுத்தி இருந்தால், இந்த வெற்றியை பெற்றுக்கொள்வது வியட்னாமோ அல்லது ஆசியாவில் வேறு எந்த நாடும் அல்ல. இலங்கையே ஆசியாவில் பலமான நாடாக இருந்திக்கும்.
எது எவ்வாறு இருந்தாலும் இலங்கை மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டி இருப்பது, இந்த பிரச்சினை ஏற்படுவதற்கு முன்னர், இந்த பிரச்சினையை தீர்க்க முடியுமான அரச தலைவர்களை நீக்கிவிட்டு, இன்று பொது மக்கள் கஷ்டப்படுகின்றனர் என்பதாகும் என்றார்.