பற்றாக்குறை இருக்கும்வரை நாட்டை அபிவிருத்தி செய்வது கடினம்; இராதாகிருஷ்ணன்
எமது விவசாயிகள் இன்று பல்வேறு துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கிழங்கு, வெங்காயம், அரிசி உற்பத்தி செய்யப்பட்டு அறுவடை செய்யும்போது அரசாங்கம் அந்த பொருட்களை இறக்குமதி செய்கிறது.

நாட்டில் பற்றாக்குறை இருக்கும்வரை நாட்டை அபிவிருத்தி செய்வது கஷ்டமான விடயமாகும். அதனால் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ருபா வழங்குவதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் இதுவரை 1300 ரூபாவுக்கு மேல் சம்பளம் வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம் பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் ) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 3857 பில்லியன் என்பதுடன் இறக்குமதி வருமானம் 5685 பில்லியன். பற்றாக்குறையாக இருப்பது 1828 பில்லியனாகும். நாங்கள் ஏற்றுமதியைவிட இறக்குமதிக்கு அதிக முன்னுரிமை வழங்குகிறோம். அதிகமான உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்யும் நிலையே காணப்படுகிறது.
இந்த விடயத்தில் அரசாங்கங்கள் ஒரு திட்டமிடல் இல்லாமல் செயற்பட்டு வந்ததாலே இவ்வாறு இறக்குமதி செய்யப்படுகிறது. எமது நாட்டில் இரண்டுவிதமான பற்றாக்குறைகள் இருந்து வருகின்றன. ஏற்றுமதி, இறக்குமதியிலும் பற்றாக்குறை இருக்கிறது.
அதேபோன்று வரவு செலவு திட்டத்திலும் பற்றாக்குறை இடம்பெற்று வருகிறது. இவ்வாறு பற்றாக்குறை இருந்துவரும் பட்சத்தில் நாட்டை அபிவிருத்தி செய்வது மிகவும் கஷ்டமான விடயமாகும். அதனால் இந்த பற்றாக்குறையை நீக்குவதற்கு தேவையான விடயங்கள் என்ன என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் அரசாங்ங்கங்களில் ஊழல் மோசடிகள் இருந்தமையால் இந்த பற்றாக்குறை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அவ்வாறான எதவும் இல்லை. அதனால் இந்த பற்றாக்குறையை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு அரசாங்கத்துக்கு நல்ல முகாமைத்துவம் இருக்க வேண்டும். ஆனால் இன்று அரச அதிகாரிகள் பணியாற்றுவதற்கு அச்சப்படுகின்றனர்.ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அவர்களுக்கு சிறைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என அச்சப்படுகின்றனர். அதனால் அவர்கள் துணிந்து செயற்படுவதற்கு முடியுமான அதிகாரத்தையும் அவர்களுக்கும் வழங்க வேண்டும்.
மேலும் ஈரான் இஸ்ரேல் மோதல் காரணமாக எமது தேயிலை ஏற்றுமதிக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளன. அதேபோன்று ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருப்பது ஆடை உற்பத்தியாகும். ஆனால் இன்று அமெரிக்காவின் வரி அதிகரிப்பால் ஆடை உற்பத்தி தளம்பல் நிலைக்கு சென்றுள்ளது.
அமெரிக்காவின் வரி அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் பேசியிருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் அது தொடர்பில் இதுவரை எந்த பிரதிபலிப்பையும் காணவில்லை என்றே தெரிவிக்க வேண்டி இருக்கிறது.
அமெரிக்காவின் வரி விதிப்பு 44 வீதம் தான் என அறிவிக்கப்பட்டால் எமது நாட்டின் ஆடைத்தொழிற்சாலைகளுக்கு என்னவாகும் என்பது கேள்விக்குரியாகும். அதனால் நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறுப்புவாய்ந்த அரசாங்கமாக இந்த அரசாங்கம் திகழவேண்டும்.
தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டால் அந்த தொழிலில் இருப்பவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும். அவர்களுக்கு போதுமான சம்பளம் இல்லை. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் 1700 ரூபா வழங்குவதாக தெரிவிக்கிறார்கள்.
ஆனால் இதுவரை 1300 ரூபாவுக்கு மேல் சம்பளம் வழங்கப்படவில்லை. அதனால் தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரித்துக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அடிப்படை பொருட்களின் விலை அதிகரிப்பால், அவர்களின் வாழ்க்கைச்செலவை கொண்டுசெல்ல 1700 ரூபாவும் போதுமானதாக இல்லை.
மேலும் அரசாங்கம் வாகன இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளதால் டொலர் இல்லாமல் போகும் என சிலர் தெரிவிக்கின்றனர். டொலருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் கடந்த காலங்களில் எமக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களையாவது இறக்குமதி செய்ய முடியாமல் போனது அந்த நேரத்தில் இந்தியாவே எமக்கு உதவி செய்து, 4 பில்லியன் ரூபா வழங்கி எமக்கு உதவி செய்தது. அதனால் மீண்டும் அவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்திவிடாமல் அரசாங்கம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் எமது விவசாயிகள் இன்று பல்வேறு துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கிழங்கு, வெங்காயம், அரிசி உற்பத்தி செய்யப்பட்டு அறுவடை செய்யும்போது அரசாங்கம் அந்த பொருட்களை இறக்குமதி செய்கிறது.
இதனால் எமது விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதனை அரசாங்கம் உணர்வதில்லை. நுகர்வோருக்கு குறைந்த விலைக்கு வழங்குவதற்கு இவ்வாறு செய்வதாக தெரிவித்து, உள்ளூர் விவசாயம் பாதிக்கப்பட்டால் எதிர்காலத்தில் அனைத்து பொருட்களும் இறக்குதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.