வட,கிழக்கில் அமைதியின்மையை ஏற்படுத்தவே ஹர்த்தாலுக்கும் அழைப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 17-08-2025 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் நபரொருவர் உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சில குழுக்கள் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றன. அந்த நோக்கத்திலேயே வடக்கு மற்றும் கிழக்கில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக ஹர்த்தாலுக்கும் அழைப்பு விக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் மக்கள் உண்மை என்ன என்பதை உணர்ந்து அதற்கமைய தீர்மானங்களை எடுக்க வேண்டும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 17-08-2025 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சில அரசியல் கட்சிகளால் வடக்கு மற்றும் கிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இராணுவ முகாம்களை இடம் மாற்றும் செயற்பாடுகள் கடந்த மாதங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுச்சுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தையங்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள 12ஆவது சிங்கப்படையணிக்குரிய முகாம் இடமாற்றம் செய்யப்படுவதற்காக தயார் நிலையில் இருந்தது.
கடந்த ஜனவரி முதல் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த முகாமில் ஆரம்பத்தில் 250 இராணுவ உறுப்பினர்கள் காணப்பட்டனர். எனினும் இடமாற்ற நடவடிக்கைகள் காரணமாக இறுதியாக 25 பேர் மாத்திரமே இங்கு பணிக்கமர்த்தப்பட்டிருந்தனர். இங்கிருந்த இராணுவத்தினர் நீக்கப்பட்டிருந்தாலும் பொருட்கள் அவ்வாறே காணப்படுகின்றன. இந்நிலையிலேயே ஆகஸ்ட் 7ஆம் திகதி அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் இரவு 11.30 மணியளவில் அனுமதியின்றி இந்த முகாமிற்குள் பிரவேசித்துள்ளனர். முகாமில் வைக்கப்பட்டிருந்த இரும்பு உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிடுவதற்காகவே இவர்கள் முகாமுக்குள் பிரவேசித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த ஐவரும் முகாமிலிருந்த இராணுவத்தினரால் விரட்டப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பிடிபட்டதால் அவர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். எஞ்சியர்கள் ஓடிக் கொண்டிருந்த போது அவர்களில் ஒருவர் முத்தையங்கட்டு வாவியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். எவ்வாறிருப்பினும் இவர்கள் தாக்கப்பட்டதாக சிலரால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமையால் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இதனோடு தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேலும் இரு சிப்பாய்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கமைய குறித்த நபரின் மரணத்தில் எவ்வித பாரதூரமான காயங்களும் காரணம் இல்லை என்றே கூறப்பட்டுள்ளது. மேலதிக பரிசோதனைகளுக்காக அவரது உடல் உறுப்பு மாதிரிகள் அந்ததந்த பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும் இந்த சம்பவத்துக்கான அடிப்படை காரணிகள் திரிபுபடுத்தப்பட்டு போலியான தகவல்கள் வெளியிடப்பட்டு சில அரசியல் குழுக்கள் வடக்கு மற்றும் கிழக்கில் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இராணுவத்தினரால் பிரஜையொருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக போலியான தகவலை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர்.
இது முற்றுமுழுதாக பிழையானதொரு பிரசாரமாகும். தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்காக அமைதியான சூழலை சீர்குலைப்பதற்காக எடுக்கப்படும் முயற்சியாகவே நாம் இதைப் பார்க்கின்றோம். இந்தக் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பீ அறிக்ஐ ஒட்டுச்சுட்டான் பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் நாட்களில் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.
இவையே தற்போது முன்னெடுக்கப்பட்டு நடவடிக்கைகள் ஆகும். சம்பவம் என்ன என்பதை சரியாகப் புரிந்து கொள்ளுமாறு அரசாங்கம் என்ற ரீதியில் வடக்கு, கிழக்கு மக்களின் கேட்டுக் கொள்கின்றோம். சில குழுக்களால் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கப்படும் சம்பவம் இங்கு இடம்பெறவில்லை. கடந்த காலங்களில் இடம்பெற்ற சில சம்பவங்களுடன் இதனையும் இணைத்து மக்கள் மத்தியில் தவறான ஒரு புரிதலை ஏற்படுத்துவதே சில தரப்பினரின் நோக்கமாகவுள்ளது.
தற்போது நாட்டை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது. அதற்கு நாட்டில் அமைதி உறுதிப்படுத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாத்திரமின்றி சகல மக்களினதும் தலையீடு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமாகும். இவ்வாறான நிலைமையிலேயே சில குழுக்கள் தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். இவற்றைப் புரிந்து கொண்டு அமைதியாக செயற்படுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.