ரணிலின் கைது குறித்து இராஜதந்திரிகள் எவரும் பேசவில்லை: அரசாங்கம்
ஜனாதிபதியொருவர் உள்நாட்டுக்குள் மரண வீடொன்றுக்கு செல்வதற்கும் வேறு இடங்களுக்குச் செல்வதற்கும் , வெளிநாடொன்றுக்கு பிரத்தியேக விமானத்தில் செல்வதற்கும் வேறுபாடு உண்டு.

பொது சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை எவ்வாறு அரசியல் பழிவாங்கலாகும்? இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். எந்தவொரு இராஜதந்திரயோ அல்லது இராஜதந்திர நிறுவனமோ இந்த விவகாரம் தொடர்பில் எவ்வித நிலைப்பாட்டையும் வெளியிடவில்லை என சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 27-08-2025அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதியொருவர் உள்நாட்டுக்குள் மரண வீடொன்றுக்கு செல்வதற்கும் வேறு இடங்களுக்குச் செல்வதற்கும் , வெளிநாடொன்றுக்கு பிரத்தியேக விமானத்தில் செல்வதற்கும் வேறுபாடு உண்டு. எனவே இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்த முடியாது. அரச உத்தியோகத்தர்களுக்கு கூட அரச வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு சில வரைமுறைகள் காணப்படுகின்றன. சுற்றறிக்கை ஊடாகவும் அது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்மை பொது சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலாகும். குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இது தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் வழக்கு விசாரணைகளின் போது மருத்துவ காரணிகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு பிணை வழங்குவதற்கும், சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கும் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்மானிக்கப்படும். இது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதாக எண்ணுபவர்கள் மேன்முறையீடுகளின் ஊடாகவும் தமக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும். இலங்கை வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டம் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படவில்லை. அதிகாரத்தின் அடிப்படையில் சட்டம் வேறுபாட்டுடனேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறான நிலைமை இல்லை என்பது இந்த வழக்கின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனவே இது அரசியல் பழிவாங்கலோ, தனிப்பட்ட பழவாங்கலோ அல்லது ஏகாதிபத்திய அரசியலமைப்பு நடைமுறையோ அல்ல. அரசியலமைப்பு ரீதியிலான ஏகாதிபத்தியத்துக்குச் செல்வதெனில் முதலில் அரசியலமைப்பில் அதற்கமைய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். 2020இல் அவ்வாறான நிலைமைகள் காணப்பட்டன. இதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளமை அரசாங்கத்துக்கு எந்த வகையிலும் சவால் அல்ல. இவர்கள் அனைவரும் யார் என்பதை மக்கள் தற்போது புரிந்து கொண்டிருப்பர். எனவே எமக்கு மகிழ்ச்சியான விடயமே.
விசாரணைகளுக்கமையவே சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். இந்த வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை குறித்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்கும். பொது சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துகின்றமை சட்டத்தை மீறும் செயலாகும். அது எவ்வாறு அரசியல் பழிவாங்கலாகும்? பொது சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டால் அவர்களுக்கு எதிராக தகுதி தராதரம் பாராமல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த விவகாரத்தில் எந்தவொரு இராஜதந்திரயோ அல்லது இராஜதந்திர அமைப்போ எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. ஒரு சில நபர்களே அவ்வாறு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர் என்றார்.