திலீபனின் நோக்கம் நிறைவேறவில்லை: ரவிகரன் எம்.பி
தமிழர் தாயகப்பரப்பில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தற்போதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தியாக தீபம் திலீபன் எந்த நோக்கத்திற்காக பசித்திருந்து தனது இன்னுயிரைத் தியாகித்தாரோ அந்த நோக்கமும், அவரின் எண்ணமும் இதுவரை நிறைவேறவில்லை. பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கின்றானென தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் 26-09-2025 அன்று நடைபெற்ற கோப் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ஈழத் தமிழர்களின் உரிமைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்த தியாக தீபம் திலீபனுக்கு இந்த உயரிய சபையில் முதற்கண் அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இராசையா பார்த்தீபன் என்னும் இயற்பெயரைக் கொண்ட தியாகச்செம்மல் திலீபன் தமிழர்களின் உரிமைக்காக தனது இன்னுயிரைத் துறந்து 38வருடங்கள் ஆகியுள்ளன.
ஆனாலும் ஈழத்தமிழர்கள் தற்போதும் உரிமைகள் மறுக்கப்பட்டநிலையிலே தமிழர் தாயகப் பரப்பில் வாழ்ந்துவருகின்றனர். தமிழர் தாயகப்பரப்பில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தற்போதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்தும் தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். தமிழர்தாயகப்பரப்பில் அதிகரித்த இராணுவமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
எனவே தியாகதீபம் திலீபன் எந்த நோக்கத்திற்காக பசித்திருந்து தனது இன்னுயிரைத் தியாகித்தாரோ அந்த நோக்கமும், அவரின் எண்ணமும் இதுவரை நிறைவேறவில்லை. அந்த வகையிலேயே பார்த்திபன் இப்போதும் பசியோடுதான் இருக்கின்றான் என்பதை இவ்வுயரியசபையிலே பதிவு செய்துகொள்ள விரும்புகின்றேன் என்றார்.





