இதுவரை குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 208 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
ஓழுக்காற்று நடவடிக்கையின் கீழ் சுமார் 1,500 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 208 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஓழுக்காற்று நடவடிக்கையின் கீழ் சுமார் 1,500 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் சேவைக்குள் பொருத்தமற்ற மற்றும் ஊழல் நிறைந்த உத்தியோகத்தர்கள் செயற்படுகின்றனர். அத்தகைய நபர்களைக் கண்டறிந்து இத்துறையில் இருந்து நீக்குவதற்கும், அவர்களுக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் 233 சிறுமிகள் உட்பட 11,131 சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகளை மையமாகக் கொண்டு 'ஐஸ்' உள்ளிட்ட போதைப்பொருட்களை விநியோகிக்கும் கடத்தல்கள் இடம்பெறுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஐஸ் போதைப்பொருளைச் சிறிய பைக்கற்றுகளில் பொதிசெய்து இனிப்புகள் , உணவு பொருட்கள் ஊடாகச் சிறுவர்களுக்கு வழங்கும் புதிய உத்திகளைக் கடத்தல்காரர்கள் முன்னெடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான செயற்பாடுகளை தடுப்பதற்காகப் பாடசாலைகளைச் சூழ விசேட புலனாய்வு உத்தியோகத்தர் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பிள்ளைகளின் உணவுப் பழக்கவழக்கங்கள், தினசரி நடத்தை முறைகள், பேச்சு மற்றும் நண்பர்களின் சேர்க்கை ஆகியவற்றில் ஏதேனும் இயல்புக்கு மாறான மாற்றங்கள் தென்பட்டால், அது குறித்துப் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.





