மரணதண்டனை கைதி சோமரத்னவின் பாதுகாப்புக் குறித்து மிகுந்த அவதானம்: காணாமல்போனோர் அலுவலகம்
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாணத்திலும், தெற்கில் மாத்தறையிலும் நினைவுகூரல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
மரணதண்டனை கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை ஏற்கனவே சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த போதிலும், இதுபோன்ற கூருணர்வு மிக்க விவகாரங்களில் முறைப்பாட்டாளர்கள், சாட்சியாளர்கள், தகவல்களை வழங்குபவர்கள் தொடர்பான இரகசிய தன்மையைப் பேணவேண்டிய பொறுப்பு இருப்பதனால், அவருடன் பேசப்பட்ட விடயங்கள் பற்றி வெளிப்படுத்த இயலாது என சுட்டிக்காட்டியுள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பிரதிநிதிகள், எது எவ்வாறெனினும் அவரது பாதுகாப்பு குறித்து தாம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் எதிர்வரும் 30 திகதி அனுட்டிக்கப்படவுள்ள நிலையில், அதனை முன்னிறுத்தி காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், அலுவலகத்தின் சமகால நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தும் நோக்கில் 13-08-2026 அன்று கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச்சந்திப்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த, நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகநாதன் தற்பரன், உறுப்பினர்களான மிராக் ரஹீம் மற்றும் தம்பையா யோகராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அங்கு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பணிகள், முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் அவர்கள் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் வருமாறு:
2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க காணாமல்போனோர் பற்றிய அலுவலக சட்டத்தின் பிரகாரம் 2018 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகமானது கடந்த காலங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதையும், இவ்வாறான சம்பவங்கள் எதிர்வருங்காலங்களில் மீள்நிகழாமல் இருப்பதை உறுதிசெய்வதையுமே பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அதன் நீட்சியாக தற்போதைய அரசாங்கம் எமது அலுவலகத்தின் இயங்குகைக்கு அவசியமான நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறது.
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்கான எமது நகர்வுகள் தொடர்பில் ஜனாதிபதியும் நீதியமைச்சரும் அக்கறையுடனும், அரசியல் ரீதியான தன்முனைப்புடனும் இருக்கிறார்கள். அதற்கமைய வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாணத்திலும், தெற்கில் மாத்தறையிலும் நினைவுகூரல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
அதேவேளை எமது அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டு, இற்றை வரையான 8 வருடகாலத்தில் காணாமல்போனோர் தொடர்பில் 23,352 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவற்றில் பொலிஸ் மற்றும் முப்படைகளைச் சேர்ந்தவர்கள் பற்றிய முறைப்பாடுகளையும் இரட்டைப் பதிவுகளையும் நீக்கியதன் பின்னர் எஞ்சியிருந்த 14,966 முறைப்பாடுகளில் 9,072 முறைப்பாடுகள் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் காணாமல்போன 31 பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ள போதிலும், அவர்களது தனியுரிமையைக் கருத்திற்கொண்டு மேலதிக விபரங்களை வெளிப்படுத்தமுடியாது. மறுபுறம் 7,726 முறைப்பாடுகள் குறித்து ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு 200,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவை வழங்குமாறு இழப்பீட்டு அலுவலகத்துக்குப் பரிந்துரைத்தோம். அவற்றில் 5,427 குடும்பங்களுக்கு அக்கொடுப்பனவு வழங்கப்பட்டிருப்பதுடன், எஞ்சிய குடும்பங்களுக்கான கொடுப்பனவு அடுத்துவரும் சில மாதங்களில் வழங்கப்படும். அத்தோடு இதுவரையான காலமும் 31 பேருடன் இயங்கிவந்த அலுவலகத்துக்குப் புதிதாக மேலும் 69 ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்களில் 41 பேர் ஏற்கனவே இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அடுத்ததாக நாடளாவிய ரீதியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழிகள் விவகாரத்தில், அவை சார்ந்த செயன்முறையை இலகுபடுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை எமது அலுவலகம் வழங்கிவருகின்றது. தற்போது செம்மணி மனிதப்புதைகுழியில் இருந்து 500 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு கண்டறியப்பட்ட எலும்புக்கூடுகள் ஒரே காலப்பகுதிக்கு உரியவையா? அல்லது வௌ;வேறு காலப்பகுதிகளைச் சேர்ந்தவையா? இவை அனைத்தும் தனியொரு சம்பவத்தின்போது புதைக்கப்பட்டவையா? அல்லது வேறு சம்பவங்களை அடுத்துப் புதைக்கப்பட்டவையா? என்பது பற்றிய ஆராய்ந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் தொல்பொருள் திணைக்களம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும். அதேபோன்று சம்பூர், கொழும்பு துறைமுகம், கொக்குத்தொடுவாய் மற்றும் குருக்கள்மடம் உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே கண்டறியப்பட்ட மற்றும் இருப்பதாகக் கூறப்படும் மனிதப்புதைகுழிகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் எமது அலுவலகம் நெருக்கமாகப் பணியாற்றிவருகின்றது.
மேலும் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உள்ளக அல்லது சர்வதேச விசாரணையில் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக வெளிப்படுத்திய கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரணதண்டனைக்கைதியாக உள்ள லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை நாம் சிறைச்சாலையில் சென்று சந்தித்தோம். இருப்பினும் இதுபோன்ற கூருணர்வு மிக்க விவகாரங்களில் முறைப்பாட்டாளர்கள், சாட்சியாளர்கள், தகவல்களை வழங்குபவர்கள் தொடர்பான இரகசியத்தன்மையைப் பேணவேண்டிய பொறுப்பு எமக்கு இருப்பதனால், அவருடன் பேசப்பட்ட விடயங்கள் பற்றி வெளிப்படுத்தவியலாது. எது எவ்வாறெனினும் அவரது பாதுகாப்பு குறித்து நாம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதுடன் சிறைச்சாலை அதிகாரிகளுடனும் கலந்துரையாடியிருக்கின்றோம் எனத் தெரிவித்தனர்.





