ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் நீதி அமைச்சர் அளித்துள்ள உறுதி
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் தெரிவித்தார்.
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் சம்பந்தமாக முன்வைக்கப்படும் ஆலோசனைகளை சாதகமாக ஆராய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று 11-02-2026 அன்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த சட்டமூலத்துக்காக பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை எதிர்வரும் 28ஆம் திகதி வரை தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்க முடியும் என்பதுடன் அவ்வாறு அனுப்பப்படும் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் தொடர்பில் சாதகமான முறையில் ஆராய்ந்து பார்த்த பின்னர், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலுக்கும் ஐரோப்பிய வெளிக்கள செயற்பாட்டு சேவையின் ஆசிய மற்றும் பசுபிக் வலயத்துக்கான பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பாவோலா பம்பலோனி, இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் காமென் மொரேனோ, ஐரோப்பிய ஆணைக்குழுவின் அபிவிருத்தி மேம்பாட்டு ஒத்துழைப்பு தொடர்பான செயற்பாட்டு குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, தென்னாசியா போன்ற துறைகளில் பதில் பிரதானி ஜேன் ஹொஸ்கின்ஸ், கொழும்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதித்துவ குழுவின் அரசியல் துறை தலைவர் பிரதிநிதிகளின் பிரதித் தலைவர் கலிஜா அகிசேவா ஆகியோரும் ஐரோப்பிய வெளிக்கள நடவடிக்கை சேவையின் ASIAPAC.6 பிரிவின் இலங்கைக்கான அதிகாரி ஏன் வென்ஹவுட், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் கொழும்பு மேம்பாட்டு தலைவர் ஜொஹான் ஹெசே, ஐரோப்பிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயக அதிகாரி பீடர்ஸ் தியடோர் மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.





