ஐ.நா.வின் உள்ளக அறிக்கையில் இருப்பது என்ன?
'பொதுமக்கள் அச்சுறுத்தலுக்கோ அல்லது இனவழிப்பு, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், இனச்சுத்திகரிப்பு போன்றவற்றுக்கு முகங்கொடுத்திருக்கும் சந்தர்ப்பங்களில் அதில் தலையீடு செய்து, மிகமோசமான அக்குற்றங்களைத் தடுக்கவேண்டிய கடப்பாடு மனித உரிமைகள் பேரவைக்கு உண்டு.

இலங்கை விவகாரத்தில் ஐ.நாவின் நடவடிக்கைகள் தொடர்பான உள்ளகப் பகுப்பாய்வு அறிக்கையானது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான வலுவான தலைமைத்துவம், செயற்திறன்மிக்க ஒருங்கிணைப்பு, மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மீறல் தடுப்பு என்பவற்றின் உடனடித் தேவைப்பாட்டை உணர்த்துகின்றது என பாதுகாக்கும் கடப்பாட்டுக்கான உலகளாவிய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது,
சமகாலத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் சுட்டிக்காட்டி பாதுகாக்கும் கடப்பாட்டுக்கான உலகளாவிய நிலையத்தினால் உறுப்புநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
'பொதுமக்கள் அச்சுறுத்தலுக்கோ அல்லது இனவழிப்பு, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், இனச்சுத்திகரிப்பு போன்றவற்றுக்கு முகங்கொடுத்திருக்கும் சந்தர்ப்பங்களில் அதில் தலையீடு செய்து, மிகமோசமான அக்குற்றங்களைத் தடுக்கவேண்டிய கடப்பாடு மனித உரிமைகள் பேரவைக்கு உண்டு.
அதனை மீளுறுதிப்படுத்தும் வகையிலேயே கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது கூட்டத்தொடரில் 'பாதுகாப்பதற்கான கடப்பாடு' தொடர்பான 44/14 எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது' என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு மேற்குறிப்பிட்ட தீர்மானத்துக்கு அமைவாக மிகமோசமான குற்றங்களையும், அட்டூழியங்களையும் தடுப்பதற்கான கடப்பாட்டை உரியவாறு நிறைவேற்றுமாறும் அக்கடிதத்தின் ஊடாக பேரவையின் உறுப்புநாடுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று சில சந்தர்ப்பங்களில் மிகமோசமான குற்றங்களைத் தடுப்பதற்கான அல்லது அதுகுறித்து செயற்திறன்மிக்க துலங்கலை வெளிப்படுத்துவதற்கான இயலுமை இன்மை உள்ளடங்கலாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை அடைந்த தோல்விகள், அதன் மீதான நம்பிக்கையை வெகுவாக சீர்குலைத்திருப்பதாக உறுப்புநாடுகளுக்கான கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பாதுகாக்கும் கடப்பாட்டுக்கான உலகளாவிய நிலையம், இலங்கை விவகாரத்தில் ஐ.நாவின் நடவடிக்கைகள் தொடர்பான உள்ளகப் பகுப்பாய்வு அறிக்கையானது மனித உரிமைகள் பேரவைக்கான வலுவான தலைமைத்துவம், செயற்திறன்மிக்க ஒருங்கிணைப்பு, மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மீறல் தடுப்பு என்பவற்றின் உடனடித் தேவைப்பாட்டை உணர்த்துகின்றது எனத் தெரிவித்துள்ளது.