இலங்கை மருத்துவ பேரவையின் தலைவர் இராஜினாமா
குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம் பின்னர் அமைச்சரின் நடவடிக்கையை சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்றும் அதனை இரத்துச் செய்வதாகவும் தீர்ப்பளித்தது.

இலங்கை மருத்துவ பேரவையின் தலைவர் வைத்தியர் வஜிர திசாநாயக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் அவர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் தனது இராஜினாமாக் கடிதத்தினை ஒப்படைத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
2020ஆம் ஆண்டு அப்போதைய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இலங்கை மருத்துவ பேரவையின் தலைவர் பதவியிலிருந்து பேராசிரியர் ஹரேந்திர சில்வா உள்ளிட்ட நான்கு பேரை நீக்கியமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம் பின்னர் அமைச்சரின் நடவடிக்கையை சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்றும் அதனை இரத்துச் செய்வதாகவும் தீர்ப்பளித்தது.
பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போதிலும், குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதோடு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தற்போதைய தலைவரான வைத்தியர் வஜிர திசாநாயக்க பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். எனினும் பேராசிரியர் ஹரேந்திர சில்வா உள்ளிட்ட ஏனைய நால்வரின் பதவிக்காலம் ஏற்கனவே காலாவதியாகிவிட்ட நிலையில் மீண்டும் பணியமர்த்தப்படுவதைத் தடுக்கிறது.