குழந்தைகளின் எதிர்காலத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த முயற்சி: அமைச்சரவை பேச்சாளர்
தேசிய கல்வி நிறுவனம் நீண்ட காலமாக அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. உரிய தரப்பினருடன் கலந்தாலோசித்து அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் தவறான கூற்றுகள் பரப்பப்படுகின்றன. கல்வியை அரசியலாக்கி குழந்தைகளின் எதிர்காலத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த முயற்சிப்பது தவறாகும். கல்வி சீர்திருத்தங்கள் முதலில் 1 - 6 ஆம் வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் 22-07-2025 அன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கல்வித்துறையில் சிறந்த மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்படும். அதற்கமையவே தேசிய கல்வி நிறுவனம் நீண்ட காலமாக அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. உரிய தரப்பினருடன் கலந்தாலோசித்து அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது கல்வி அமைச்சினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுகுறித்த கலந்தாலோசனைகள் இன்னும் நிறைவடையவில்லை. எனவே துறைசார்ந்தவர்களுக்கு யோசனைகளை முன்வைப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கல்வித்துறையில் மறுசீரமைப்புக்களை முன்னெடுப்பதற்கு ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளையே பிரதமர் தலைமையிலான கல்வி அமைச்சு முன்னெடுத்து வருகிறது.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையவில்லை. கல்வித்துறையுடன் தொடர்புடைய அனைவரும் இதற்காக தமது யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்க முடியும். 1 - 6 ஆம் வகுப்பு வரை முதலில் மறுசீரமைப்புக்கள் ஆரம்பிக்கப்படும். உலகலாவிய தொழிநுட்ப வளர்ச்சியுடன் இலங்கையின் மாணவர்களின் அறிவு மற்றும் தேர்ச்சியை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றார்.