பிரதி செயலாளர் நாயகத்தை பதவி நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு கிடையாது: உதய கம்மன்பில
தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக கோரப்பட்ட விடயத்தை அடிப்படையாகக் கொண்டு சபாநாயகர் ஓய்வுப்பெற்ற மேலதிக செயலாளர் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
மூன்று வருடகால சேவையின் பின்னர் நியமனத்தை நிரந்தரமாக்க வேண்டும் என்பதற்கு பதிலாக ஒருவருட காலத்தில் நியமனத்தை நிரந்தரமாக்கியதால் பாராளுமன்ற செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன பதவி நீக்கப்பட்டுள்ளார். நியமனத்தை நிரந்தரமாக்கியது தவறாயின் குற்றவாளி அமைச்சரவையே தவிர, நியமனம் பெற்றவரல்ல, பிரதி செயலாளர் நாயகத்தை பதவி நீக்கம் செய்வதற்கு சபாநாயகருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் 26-01-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சபாநாயகரின் அரசியல் நாடகம் நாளுக்கு நாள் அரங்கேறிய வண்ணம் உள்ளது.சபாநாயகர் வரலாற்றை புதுப்பித்து பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தை பதவி நீக்கியுள்ளார்.இதனூடான சபாநாயகரின் அறியாமை மீண்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.சபாநாயகரின் தீர்மானத்தில் பல குறைகள் காணப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையால் சமிந்த குலரத்ன பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்.
பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் ஒழுக்கவியல் தொடர்பான அதிகாரி பாராளுமன்ற செயலாளர் நாயகமே தவிர சபாநாயகர் அல்ல, ஆகவே பிரதி செயலாளர் நாயகத்தை பதவி நீக்கம் செய்வதற்கு சபாநாயகருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. பதவி நீக்கம் செய்வதற்கு முன்னர் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட நபர் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.இருப்பினும் பதவி நீக்கப்பட்ட பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தொடர்பில் எவ்விதமான ஆரம்பக்கட்ட விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக கோரப்பட்ட விடயத்தை அடிப்படையாகக் கொண்டு சபாநாயகர் ஓய்வுப்பெற்ற மேலதிக செயலாளர் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தான் சபாநாயகர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இருப்பினும் ஆரம்பக்கட்ட விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதிகாரியை காட்டியிலும் பதவி நிலையில் உயர்வாக உள்ளவரையே நியமிக்க வேண்டும்.பாராளுமன்ற பிரிதி செயலாளர் நாயகம் பதவியை போன்று பாராளுமன்ற பணிக்குழாம் பிரதானி பதவியையும் சமிந்த குலரத்ன வகித்துள்ளார்.இது அமைச்சரவை அமைச்சரின் செயலாளரின் பதவிக்கு இணையானது.ஆகவே மேலதிக செயலாளர் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள முடியாது.
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து நியமனம் பெற்றதால் சமிந்த குலரத்ன பதவி நீக்கப்பெற்றார் என்று ஒரு தரப்பினரும்,சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளருடனான முரண்பாட்டினால் பதவி நீக்கப்பட்டார் என்று பிறிதொரு தரப்பினரும் குறிப்பிடுகின்றனர்.உண்மையில் இவ்விரண்டு காரணிகளும் தவறானதே.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் 03 வருடங்கள் சேiவையில் இருந்ததன் பின்னர் அவரது நியமனம் நிரந்தரமாக்கப்படும்.இருப்பினும் ஒருவருட காலத்தில் இவரது சேவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் பதவி நீக்கப்பட்டுள்ளார்.சேவையில் உள்ளவரால் அவரது நியமனத்தை நிரந்தரமாக்கிக் கொள்ள முடியாது. அவரை காட்டிலும் உயர் பதவியில் உள்ளவரால் தான் அவரது நியமனம் நிரந்தரமாக்கப்பட்டிருக்கும்.சட்ட ரீதியில் சொல்வதாயின் அது நியமிப்புச் செய்யும் அதிகாரியாவர். பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தை நியமிப்பு செய்யும் அதிகாரியாக அமைச்சரவையே செயற்பட்டுள்ளது.ஒருவருட காலத்தில் நியமனத்தை நிரந்தரமாக்கியது தவறாயின் குற்றவாளி நியமிப்புச் செய்தவரே தவிர, நியமனம் பெற்றவரல்ல,ஆகவே நகைச்சுவையாக செயற்படாமல் பதவிக்கு ஏற்றாட்போல் செயற்படுமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.





