பேரனர்த்த மீட்சிக்கு அவுஸ்திரேலியா ஒரு மில்லியன் டொலர்கள் உதவி
கள உதவிகளை வழங்குவதை முன்னிறுத்தி மனிதாபிமானப் பங்காளிகளுடனும், ஐக்கிய நாடுகள் சபையுடனும் இணைந்து செயலாற்றவுள்ளோம். அத்தோடு உடனடி உதவிகளை வழங்கும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு அவசியமான ஆதரவை வழங்கிவருகிறோம்.
பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையுடன் உடன்நிற்பதாகத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலியா, உடனடி மனிதாபிமான உதவிகளுக்கென ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் நிதியுதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், இலங்கையுடனான உடன்நிற்பு மற்றும் உதவி வழங்கல் தொடர்பில் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
‘தித்வா’ சூறாவளியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளுக்குப் பங்களிப்புச் செய்யக்கூடியவகையில் ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதியுதவியை வழங்குகிறோம்.
இக்கடினமான சூழ்நிலையில் நாம் இலங்கையுடன் உடன்நிற்கிறோம். குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கு அவசியமான உடனடி விநியோக மற்றும் சேவை வழங்கல்களுக்குரிய ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
கள உதவிகளை வழங்குவதை முன்னிறுத்தி மனிதாபிமானப் பங்காளிகளுடனும், ஐக்கிய நாடுகள் சபையுடனும் இணைந்து செயலாற்றவுள்ளோம். அத்தோடு உடனடி உதவிகளை வழங்கும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு அவசியமான ஆதரவை வழங்கிவருகிறோம்.
மேற்படி நிதியுதவிக்கு மேலதிகமாக இலங்கையில் உள்ள எமது சிவில் சமூகப்பங்காளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்கள் வசமுள்ள நிதியை பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சந்தித்து அவர்களது உடனடித்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம். எமது நிதியுதவியானது பெண்கள், விசேட தேவையுடையோர் உள்ளடங்கலாக பின்தங்கிய அல்லது வலுவற்ற நிலையில் இருப்போருக்கு உதவுவதற்கு முன்னுரிமை அளிக்கிறது.
அதேவேளை பிராந்திர நிவாரண நிதியம் நிறுவப்பட்டிருப்பதனைப் பெரிதும் வரவேற்கிறோம். இதனுள் அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய நாடுகள் குடும்பத்திட்ட சங்கம் என்பவற்றினால் நிர்வகிக்கப்படும் பிராந்திய மீளக்கட்டியெழுப்பல் திட்டமும் உள்ளடங்குகிறது.
அதனூடாக தற்போதைய நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு அவசியமான பாலியல் மற்றும் சுகாதார ரீதியான பாதுகாப்பை உறுதிசெய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





