கோட்டை புகையிரத நிலையத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய மூன்று மாடி சேவை கட்டிடம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை புனரமைத்து நவீன மயமாக்கும் பணிகள், கொழும்பு புறநகர் புகையிரததிட்டத்தின் கீழ் 09-04-2026 அன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
109 ஆண்டுகள் பழமையான இந்த புகையிரத நிலையத்தின் பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாக்கும் அதேவேளை, பயணிகளுக்கான நவீன வசதிகளை அறிமுகப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
சுமார் 2,162.64 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், 15 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து வழங்குகின்றன.
புகையிரதநிலையத்தின் தொல்பொருள் பெறுமதியைப் பாதுகாத்து, பயணிகளின் சௌகரியத்தை மேம்படுத்தும் வகையில் இந்த நவீனமயமாக்கல் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மருதானை மற்றும் கொம்பனித்தெரு முனைகளில் உள்ள பழைய மேம்பாலங்களுக்குப் பதிலாக, மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் கொண்ட நவீன பயணிகள் மேம்பாலங்களை அமைக்கப்படவுள்ளன. மேலும் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய மூன்று மாடி சேவை கட்டிடம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
ஒல்கொட் மாவத்தையின் குறுக்கே உள்ள மேம்பாலத்தை, சம்பத் வங்கிக்கு அருகிலுள்ள மெக்கல்லம் வீதி வரை நீடிப்பதற்கும் முதற்கட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் உள்நுழைவு மற்றும் வெளியேறலை இலகுபடுத்தும் வகையில் இ-கேட் உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. தினசரி புகையிரதசேவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.





