கொழும்பு திட்டத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு: பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விவாதப் போட்டி புதன்கிழமை ஆரம்பம்
இந்நிகழ்வில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் மனித மூலதன மேம்பாட்டின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடுவதற்காக, பல்கலைக்கழக மாணவர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் விசேட விவாதப் போட்டியொன்று எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.
கொழும்புத் திட்டத்தின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 'கொழும்புத் திட்டமும் மனித மூலதன மேம்பாடும்: மாறிவரும் உலகளாவிய சூழலில் தெற்கிலிருந்து -தெற்கிற்கான ஒத்துழைப்பை புத்துயிரூட்டல்' என்ற கருப்பொருளின் கீழ் இந்த விவாதப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு 07, வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. கொழும்புத் திட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப்போட்டியில், நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
விவாதப் போட்டிக்கான பதிவுகள் அன்றைய தினம் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், பங்கேற்பாளர்கள் அனைவரும் காலை 8.15 மணிக்குள் தங்களது ஆசனங்களில் அமர்ந்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





