கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணி இடைநீக்கம்
பொறுப்புக் கூற வேண்டிய பதவியில் கடமையாற்றி வரும் அரச வைத்தியரான ரூக்ஷான் பெல்லென ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் அமைதியின்மையை உருவாக்கும் வகையிலும் கருத்துகளை வெளிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதி பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த வைத்தியர் ருக்ஷான் பெல்லனவுக்கு எதிராக, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் உத்தரவுக்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ அலுவலக அறையிலிருந்த தனது உடமைகளுடன் வைத்தியர் ருக்ஷான் பெல்லன வெளியேறியிருந்தார்.
பதில் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணி இடைநீக்கம் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டு, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சால் 18 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
பொறுப்புக் கூற வேண்டிய பதவியில் கடமையாற்றி வரும் அரச வைத்தியரான ரூக்ஷான் பெல்லென ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் அமைதியின்மையை உருவாக்கும் வகையிலும் கருத்துகளை வெளிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் விசேட விசாரணைக்குழுவினரால் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையின்படி, வைத்தியருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரச சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அவர் பணி இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது, அவருக்குச் சாதகமான முறையில் வைத்திய அறிக்கையை வழங்கியதாகவும் வைத்தியர் ருக்ஷான் பெல்லன மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அத்துடன் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் வடகொழும்புத் தொகுதி வலய அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைக் காரணமாகத் தான் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார். அலுவலகத்திலிருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்குப் பதிலளித்த அவர், "நான் ஒரு வைத்தியர். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் பதவி பறிக்கப்பட்டாலும், தனியார் வைத்தியசாலைகளில் என்னால் பணிபுரிய முடியும். தற்சமயம் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தால், அதற்கும் எதிராக என் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பார்கள்" என்றார்.





