நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்து வெறும் பொது அறிவே - அமைச்சர் நளிந்த
மோசடியளார்கள் தண்டனைக்குட்படுத்தப்படுவர் என்பதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய வழக்குகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் தொடர்புடைய விசாரணைகளின் தீர்ப்புகள் தொடர்பில், ஜனாதிபதி அது குறித்து வெளியிட்ட கருத்துக்கள் அனைத்தும் வெறும் பொது அறிவின் அடிப்படையிலானவையே தவிர, நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட அழுத்தங்கள் அல்ல என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 05-05-2026 அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பல்வேறு முக்கிய வழக்கு விசாரணைகளின் தீர்ப்புக்கள் இம்மாதம் வழங்கப்படவுள்ளன. அத்தோடு பல பிரபல அரசியல் பிரமுகர்களுடன் தொடர்புடைய வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. அவை தொடர்பில் எதிர்பார்ப்புடன் இருப்பவர்களுக்கு அந்த தினங்கள் நினைவில் இருப்பது ஒரு சாதாரண விடயமாகும்.
இது ஒரு பொது அறிவாகும். அந்த அடிப்படையிலேயே ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருந்தார். வழக்கு விசாரணைகள் இடம்பெறும் போக்கின் அடிப்படையில் அது குறித்த ஒரு பொது அறிவின் அடிப்படையிலேயே ஜனாதிபதி சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். மாறாக அவற்றில் எவ்வித இடையூறுகளோ அழுத்தங்களோ எவராலும் பிரயோகிக்கப்படுவதில்லை.
மோசடியளார்கள் தண்டனைக்குட்படுத்தப்படுவர் என்பதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக தண்டனைகள் வழங்கப்படும். இவை தொடர்பில் சாதாரண பொது மக்களும் தற்போது விளிப்புடனிருக்கின்றனர். எந்தவொரு வழக்கு தீர்ப்பு தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எவ்வித காரணியும் தெரியாது. அவர் தனக்கான மக்கள் ஆணை என்ன என்பதை அறிவார் என்றார்.





