கிளிநொச்சியில் நிறுவப்பட்டுள்ள பெய்லி பாலம் மெய்நிகர் முறையில் அங்குரார்ப்பணம்
ஸ்தம்பிதமடைந்திருக்கும் வீதிப்போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் 'பெய்லி பிரிட்ஜ்' எனப்படும் தற்காலிக பாலங்களை அமைப்பதற்கு அவசியமான உதவிகள் இந்தியாவினால் வழங்கப்பட்டன. '
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 'பெய்லி' பாலத்தொகுதிகளைப் பயன்படுத்தி, இந்திய இராணுவப் பொறியியலாளர்களினால் கிளிநொச்சியில் நிறுவப்பட்டுள்ள 120 அடி நீளமான பெய்லி பாலம் நேற்றைய தினம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரால் மெய்நிகர் முறையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் 23-12-2025 அன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து பரந்துபட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
அதனைத்தொடர்ந்து வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தையும் சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் இந்திய அனுசரணையுடன் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட 'பெய்லி' பாலம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோரால் மெய்நிகர் முறைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அனர்த்தங்களின் விளைவாக நாடளாவிய ரீதியில் முக்கிய வீதிகள், பாலங்கள், தண்டவாளங்கள் என போக்குவரத்துக்கும், இணைப்பைப் பேணுவதற்கும் அவசியமான உட்கட்டமைப்புக்கள் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அவ்வாறு ஸ்தம்பிதமடைந்திருக்கும் வீதிப்போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் 'பெய்லி பிரிட்ஜ்' எனப்படும் தற்காலிக பாலங்களை அமைப்பதற்கு அவசியமான உதவிகள் இந்தியாவினால் வழங்கப்பட்டன. 'பெய்லி பிரிட்ஜ்' என்பது இரும்பினாலான பகுதிகளை உரிய இடங்களில் பொருத்தி தற்காலிகமாக நிர்மாணிக்கப்படும் பாலமாகும். அதன்படி இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 'பெய்லி' பாலத்தொகுதிகளைப் பயன்படுத்தி, இந்திய இராணுவப் பொறியியலாளர்களினால் கிளிநொச்சியில் நிறுவப்பட்டுள்ள 120 அடி நீளமான பாலமே நேற்றைய தினம் அமைச்சர்களான ஜெய்சங்கர் மற்றும் விஜித்த ஹேரத்தினால் மெய்நிகர் முறையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.





