இந்தியாவின் நேரடி தலையீட்டை கோரும் தமிழ் அரசியல் சக்திகள்
தமிழகத்துடனான நெருக்கமான பொருளாதார உறவின்றி இலங்கை மீண்டெழுவது சவாலானது என்பதையும் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
இலங்கைத் தீவில் நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதில் இந்தியாவின் வகிபாகம் மிக முக்கியமானது என்பதை இலங்கைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளன.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனை ஏப்ரல் 19ஆம் திகதி சந்தித்த தமிழ் அரசியல் தலைவர்கள், வடக்கு - கிழக்கு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற புதுடில்லி காத்திரமான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக, 'ஏக்கிய ராஜ்ய' (ஒற்றையாட்சி) என்ற சிங்களச் சொல்லால் வரையறுக்கப்படும் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் முன்வைக்கப்படும் எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்காது என்பதில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மிகத் தெளிவான ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்திய துணை ஜனாதிபதியிடம் கையளித்த மகஜரில், 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் அதன் வழி உருவான மாகாண சபை முறைமை ஆகியவை ஒற்றையாட்சி முறைமைக்குள் எவ்வாறு முடக்கப்பட்டுள்ளன என்பதை விரிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த முறைமை, காலப்போக்கில் இலங்கை அரசாங்கத்தினால் அதன் வீரியம் குறைக்கப்பட்டு, ஒரு வெற்று நிர்வாக அமைப்பாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் விபரித்தார்.
மாகாண சபைகளுக்கு உண்மையான அதிகாரப் பகிர்வு வழங்கப்படவில்லை என்பதையும், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட 32க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் மத்தி நோக்கிய அதிகாரக் குவிப்பு சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையும் அவர் ஆதாரங்களுடன் முன்வைத்தார்.
தமிழ்த் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான தீர்வே தமிழ் மக்களின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் என்றும் துணை ஜனாதிபதியிடத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், வடக்கு - கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் குறித்தும் மகஜரில் கவலை தெரிவிக்கப்பட்டது.
வெடுக்குநாறி மலை போன்ற பாரம்பரிய இந்து ஆலயங்கள் மற்றும் திரியாய பகுதியில் 32 பௌத்த விகாரைகளை அமைக்கும் முயற்சிகள் மூலம் தமிழர் தேசத்தின் அடையாளம் அழிக்கப்படுவதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டுமென செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்தார்.
இவ்வாறான நில ஆக்கிரமிப்புகள் தொடர்வது இனப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் என அவர் எச்சரித்தார். தமிழக முதலமைச்சர் மற்றும் அரசியல் தலைமைகளின் ஆதரவுடன் இந்திய மத்திய அரசு இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இச்சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர்கள், சமஷ்டி தீர்வின் அவசியத்தை வலியுறுத்தியதோடு, மாகாண சபைத் தேர்தல்கள் திட்டமிட்டபடி தாமதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினர். 2015இல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது குறிப்பிட்ட “கூட்டுறவு சமஷ்டி” என்ற கருத்தாக்கத்தை நடைமுறைப்படுத்த இந்தியா உதவ வேண்டும் என சி.வி.கே. சிவஞானம் கோரிக்கை விடுத்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக சட்டச் சிக்கல்களை நீக்க தனிநபர் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டும், அரசாங்கம் பல்வேறு காரணங்களைக் கூறி காலங்கடத்தி வருவதாக எம்.ஏ. சுமந்திரன் அதிருப்தி வெளியிட்டார்.
இதற்குப் பதிலளித்த துணை ஜனாதிபதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான சந்திப்பின்போது மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்துப் பேசப்பட்டதாகவும், அதற்கான சாதகமான சமிக்ஞையை ஜனாதிபதி வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
மறுபுறம், போருக்குப் பின்னரான மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்திய வீட்டுத்திட்டத்தின் மூலம் 50 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டதை நன்றியுடன் நினைவுகூர்ந்த சிவஞானம் சிறிதரன், இந்தியாவிலிருந்து மீளத் திரும்பும் இலங்கைத் தமிழர்களுக்கான நிரந்தர வாழ்வாதார உதவிகள் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
குறிப்பாக, வடக்கு - கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் மக்கள் தொகைச் சமநிலை மாற்றப்படுவதைத் தடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. அத்துடன், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி மற்றும் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு போன்ற உட்கட்டமைப்புத் திட்டங்களில் இந்தியாவின் நேரடிப் பங்களிப்பு வடக்கு - கிழக்கு பொருளாதார வளர்ச்சிக்கு மிக அவசியமென தருமலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பேசுகையில், போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் இன்னும் போர்க்கால சூழலிலேயே வாழ்ந்து வருவதாகவும், காணி ஆக்கிரமிப்புகள் தொடர்வதாகவும் சுட்டிக்காட்டினார். அத்துடன் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாக இருநாட்டு மீனவர்களையும் ஆழ்கடல் மீன்பிடிக்கு ஊக்குவிக்கும் கூட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த அவர் யோசனை தெரிவித்தார்.
சந்திப்பின் நிறைவில், இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் தமிழ்த் தலைவர்களிடையே இருக்க வேண்டிய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சிவஞானம் சிறிதரன் மற்றும் சி.வி.கே. சிவஞானம் ஆகியோரின் கரங்களைப் பற்றிப்பிடித்த அவர், 'தமிழர்களுக்காகப் பல கட்சிகள் இருக்கலாம், ஆனால் பொதுவான உரிமைகளுக்காக நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்' என்று அறிவுறுத்தினார்.
பொருளாதார ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியாவின் உதவி அத்தியாவசியமானது என்பதையும், தமிழகத்துடனான நெருக்கமான பொருளாதார உறவின்றி இலங்கை மீண்டெழுவது சவாலானது என்பதையும் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, இலங்கை அரசாங்கத்தின் மீது காத்திரமான ராஜதந்திர அழுத்தத்தைப் பிரயோகிப்பதன் மூலம், தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் கௌரவமான மற்றும் நீதியான அரசியல் தீர்வை இந்தியா சாத்தியமாக்கும் என்ற பலத்த நம்பிக்கையுடன் இச்சந்திப்பு நிறைவு பெற்றது.
இது ஈழத்தமிழர்களின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் 80களில் உமாமகேஸ்வரன், சிறிசபாரத்தினம் போன்ற ஆயுத இயக்கங்களின் தலைவர்களுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்திருக்கின்றார். அந்த விடயத்தினை சித்தார்த்தன், செல்வம் ஆகியோரிடத்தில் பகிர்ந்திருக்கின்றார்.
அந்த வகையில் பார்க்கின்றபோது, அவருக்கு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமான ஆழமான பட்டறிவு காணப்படுகின்றது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அப்படியான நிலையில் அவருடைய வகிபாகம் அடுத்து அதிகார எல்லைகளைக் கடந்து எவ்வாறு அமையப்போகின்றது என்பதுதான் தற்போது மேலெழுந்துள்ள எதிர்பார்ப்பாகும்.





