இலங்கையில் மனிதாபிமான பாதுகாப்பின் வீழ்ச்சியின் அடையாளமாக மாறியிருக்கும் மூதூர் படுகொலை
இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்போதும், போர்கள் மூளும்போதும், பட்டினி பரவும்போதும் மனிதாபிமான பணியாளர்கள் உதவிக்கு வருவார்கள்.
மூதூர் படுகொலையானது இலங்கையில் மனிதாபிமான பாதுகாப்பின் வீழ்ச்சிக்கான அடையாளமாக மாறியிருப்பதாக லீகல் அக்ஷன் வேல்ட்வைட்' அமைப்பின் சட்ட ஆலோசகர் ஹெக்டர் ஷார்ப் மற்றும் 'அக்ஷன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர்' அமைப்பின் மனிதாபிமான கலந்தாய்வு அதிகாரி லில்லி ஸ்பார்க்ஸ் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்திருந்த வேளையில், 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று 'அக்ஷன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர்' (பட்டினிக்கு எதிரான இயக்கம்) அமைப்பின் 17 தன்னார்வத் தொண்டுப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் இடம்பெற்று 20 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், இன்னமும் அதற்குப் பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இதுகுறித்து 'லீகல் அக்ஷன் வேல்ட்வைட்' அமைப்பின் சட்ட ஆலோசகர் ஹெக்டர் ஷார்ப் மற்றும் 'அக்ஷன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர்' அமைப்பின் மனிதாபிமான கலந்தாய்வு அதிகாரி லில்லி ஸ்பார்க்ஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள கட்டுரையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்போதும், போர்கள் மூளும்போதும், பட்டினி பரவும்போதும் மனிதாபிமான பணியாளர்கள் உதவிக்கு வருவார்கள். நிர்க்கதி நிலையிலுள்ள சமூகங்கள் அவர்களது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவர்கள் கைகொடுப்பார்கள். ஆனால் மக்களுக்கு உதவும் அவர்களே தாக்குதலுக்கு உள்ளானால் என்ன நேரும்?
2006 ஆம் ஆண்டு 'அக்ஷன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர்' (பட்டினிக்கு எதிரான இயக்கம்) அமைப்பின் 17 தன்னார்வத் தொண்டுப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்தது. இது மனிதகுலத்தின் மீதான தாக்குதலாகவே சகலராலும் நோக்கப்பட்டது.
மூதூர் படுகொலையானது இலங்கையில் மனிதாபிமானப் பாதுகாப்பின் வீழ்ச்சிக்கான அடையாளமாக மாறியிருக்கிறது. 2007 ஆம் ஆண்டு நோர்வே அகதிகள் பேரவையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 2006 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மனிதாபிமானப் பணிகளுக்கான இடைவெளி சுருங்கிவருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.





