மின்சார கட்டணத்தில் 18 சதவீத உயர்வு
2026 செப்டம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னர் மின்சாரக் கொள்முதல் மற்றும் விநியோகத்திற்கான முறையான ஒப்பந்தங்களை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அமலாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய அமைப்புக் கட்டமைப்பு இயக்குநரினால் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட செலவு மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு, நாளை 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 2026 ஆம் ஆண்டுக்கான சிறப்பு மின்சாரக் கட்டணத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் 09-05-2026 அன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளமை, வறட்சியான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி எதிர்பார்த்ததை விடக் குறைந்துள்ளமை மற்றும் நாட்டில் நிலவும் கடும் வெப்பத்தினால் மின்சாரத்துக்கான தேவை அதிகரித்துள்ளமை போன்ற காரணங்களால் மின்சாரத் துறையில் 38 பில்லியன் ரூபா நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட கட்டணத்தை உயர்த்த வேண்டியிருந்த போதிலும், அரசாங்கம் வழங்கியுள்ள 15 பில்லியன் ரூபா மானியத்தைப் பயன்படுத்தி சாதாரணப் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் பயனாக நாட்டில் உள்ள மொத்த மின்சார பாவனையாளர்களில் 95 சதவீதமானோருக்குக் கட்டண உயர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, வீடுகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் பிரிவில் மாதாந்தம் 180 அலகுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்துவோருக்குக் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது. அதேபோன்று, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைகள், விடுதிகள் மற்றும் பொது நோக்கங்கள் பிரிவின் முதலாம் உட்பிரிவு நுகர்வோருக்கும் கட்டண உயர்வு கிடையாது. எனினும், மாதாந்தம் 180 அலகுகளுக்கு மேலாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீட்டுப் பாவனையாளர்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு 18 சதவீதக் கட்டண உயர்வு அமலுக்கு வரும். அதேபோன்று, அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும், பொதுத் தேவை, பொதுத்துறை, விடுதித் துறை மற்றும் தொழில்துறை ஆகியவற்றின் 2 மற்றும் 3 ஆம் உட்பிரிவு நுகர்வோருக்கு 18 சதவீதக் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்.
இந்தக் கட்டண உயர்வு தீர்மானத்துக்கு நிலக்கரி பிரச்சினை எவ்விதத்திலும் காரணமாக அமையவில்லை. நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் மேலதிக உற்பத்திச் செலவுகளை நுகர்வோர் மீது சுமத்தக் கூடாது என்பதில் ஆணைக்குழு உறுதியாக உள்ளது. அத்துடன், மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை நியாயமான விலையில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளத் தவறியமைக்காக தேசிய அமைப்புக் கட்டமைப்பு இயக்குநருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும், எரிபொருள் விலை நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய ஒரு பொது விசாரணையை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026 செப்டம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னர் மின்சாரக் கொள்முதல் மற்றும் விநியோகத்திற்கான முறையான ஒப்பந்தங்களை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அமலாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண உயர்வு விபரங்களின்படி, 210 அலகுகளைப் பயன்படுத்தும் ஒரு வீட்டுப் பாவனையாளரின் கட்டணம் 1,760 ரூபாவாலும், 240 அலகுகளைப் பயன்படுத்துவோருக்கு 2,210 ரூபாவாலும் அதிகரிக்கும். அதேபோல், 270 அலகுகளுக்கு 2,660 ரூபாவாலும், 300 அலகுகளைப் பயன்படுத்துவோருக்கு 3,110 ரூபாவாலும் கட்டணம் உயரும். 2030 ஆம் ஆண்டிற்குள் திரவ எரிபொருட்களில் தங்கியிருப்பதை முற்றாக நீக்கி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை அடைவதற்கான திட்டங்களைத் திருத்தியமைக்க ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. உரிமதாரர்கள் கட்டணத் திருத்தத் தகவல்களை உரிய நேரத்தில் மற்றும் துல்லியமாகச் சமர்ப்பிக்க வேண்டும்; தாமதத்தால் ஏற்படும் இழப்புகளை நுகர்வோரிடமிருந்து வசூலிக்க அனுமதிக்கப்பட மாட்டாது. மின்சாரக் கட்டணங்கள் மூலம் வசூலிக்கப்படும் மேலதிக நிதியை மற்ற தேவைகளுக்கு செலவிட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவை எதிர்காலக் கட்டணக் குறைப்புக்காக நுகர்வோருக்கே வழங்கப்படுவதை உறுதி செய்ய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என பேராசிரியர் கே. பி. எல். சந்திரலால் மேலும் தெரிவித்தார்.





