கொழும்பு துறைமுகத்தில் இரு இந்திய போர்க்கப்பல்கள்
தொழில்முறை ரீதியிலான கலந்துரையாடல்கள் மூலம், இலங்கைக் கடலோர காவல் படையுடனான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இந்த விஜயம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துக்கான கடல் கடந்த வெளிநாட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்தியக் கடலோரக் காவல் படையின் 'வராஹா' மற்றும் 'அதுல்யா' ஆகிய ரோந்துப் போர்க்கப்பல்கள் 24-01-2026 அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
கடல்சார் தேடல் மற்றும் மீட்பு, கடல் மாசடைவதை தடுத்தல், கடல்சார் சட்ட அமலாக்கம் மற்றும் கப்பல்களை சோதனையிடும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் தொழில்முறை ரீதியிலான கலந்துரையாடல்கள் மூலம், இலங்கைக் கடலோர காவல் படையுடனான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இந்த விஜயம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தில் மரியாதைய நிமித்தமான சந்திப்புகள், கலாச்சாரப் பரிமாற்றங்கள், சமூக நலத்திட்டங்கள் மற்றும் 'புனீத் சாகர் அபியான்' திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் முன்னெடுப்புகள் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்தப் போர்க்கப்பல்கள் 'சாகர் எக்ஸ்' கூட்டுப் பயிற்சியிலும், கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெறவுள்ள இந்திய குடியரசு தினக் கொண்டாட்டங்களிலும் பங்கேற்கவுள்ளன.
இது பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யும் இந்தியாவின் 'சாகர்' தொலைநோக்குப் பார்வையை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.





