இனவாதம் மற்றும் மதவாதத்தை பரப்புவதற்கு முயற்சி: அமைச்சர் ஆனந்த விஜேபால
தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டத்தை மாற்றியமைப்பதற்கோ, அகற்றுவதற்கோ அல்லது நிர்மாணிப்புக்களை முன்னெடுப்பதற்கோ நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை ஒரு தரப்பினர் தமது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள். பிறிதொரு தரப்பினர் இனவாதம் மற்றும் மதவாதத்தை பரப்புவதற்கு முயற்சிக்கிறார்கள்.நாட்டில் இனவாதம் மற்றும் மதவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. திருகோணமலை பகுதியில் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 18-11-2025 அன்றுநடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து கேள்வியெழுப்பினார்.இதற்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பாராளுமன்றத்துக்கு விடயங்களை முன்வைத்துள்ளோம்.இந்த சம்பவம் குறித்து 1784 -1 பிசி. 25 ஆம் இலக்க பி அறிக்கை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பி அறிக்கையின் உண்மை தன்மை பற்றி ஆராய்வதற்கு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தரப்பினரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விடயம் 2025.11.26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டத்தை மாற்றியமைப்பதற்கோ, அகற்றுவதற்கோ அல்லது நிர்மாணிப்புக்களை முன்னெடுப்பதற்கோ நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விடயம் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கரையோர பாதுகாப்பு பிரிவு முன்வைத்த முறைப்பாட்டுக்கமைய இந்த இடத்தை அளக்கும் பணிகளை பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை ஒரு தரப்பினர் தமது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள். பிறிதொரு தரப்பினர் இனவாதம் மற்றும் மதவாதத்தை பரப்புவதற்கு முயற்சிக்கிறார்கள்.
நாட்டில் இனவாதம் மற்றும் மதவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. திருகோணமலை பகுதியில் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என்றார்.





