திருமலை விகாரையில் புத்தர் சிலை வைப்பதற்கு தேரர்களுக்கு உரிமை உள்ளது: எதிர்க்கட்சித்தலைவர் சஜித்
2010ஆம் ஆண்டில் பௌத்த நடவடிக்கைகள் திணைக்களத்தில் அது பதிவு செய்யப்பட்டுள்ளது. புனிதபூமி உரித்தும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
திருகோணமலை சம்புத்தஜயந்தி போதிராஜ விகாரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சகல பணிகளையும் முன்னெடுக்கும் சுதந்திரம் ,உரிமை தேரர்கள் உள்ளிட்ட நிர்வாக சபையினருக்கு உள்ளது.அதில் தலையிட எவருக்கும் உரிமை கிடையாது.எனவே தற்போது. ஏற்பட்டுள்ள நிலைமையை சீராக்க உடனடியாக ஜனாதிபதி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மகாநாயக்க தேரர்களை சந்தித்து அவர்களின் ஆலோசனைகளை பெற்று ஏற்படக்கூடிய இனவாத, மதவாத தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 17-11-2025 அன்று இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைசசு மற்றும் நீதி மற்றம் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் அரசியலமைப்புக்கமைய பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அத்துடன் பெளத்தசாசனத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு . அதேபோன்று மற்றைய மதங்களுக்கும் உரிய இடத்தை வழங்குவது தொடர்பிலும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையில் 1951ஆம் ஆண்டில் திருகோணமலை சம்புத்ஜயந்தி போதிராஜ விகாரை ஆரம்பிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் பௌத்த நடவடிக்கைகள் திணைக்களத்தில் அது பதிவு செய்யப்பட்டுள்ளது. புனிதபூமி உரித்தும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த விகாரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சகல பணிகளையும் முன்னெடுக்கும் சுதந்திரம்,உரிமை தேரர்கள் உள்ளிட்ட நிர்வாக சபையினருக்கு உள்ளது. இதனையே பின்பற்ற வேண்டும். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி மற்றைய மதங்களுக்கும் உரிய இடங்களை வழங்கி செயற்பட வேண்டும்.
ஆனால் இப்போது என்ன நடந்துள்ளது? அந்த புனித பூமிக்குள் பொலிஸார் நுழைந்து, புத்தர் சிலை இருக்க வேண்டிய இடம் தொடர்பில் தீர்மானிக்கின்றனர். அதேபோன்று அறநெறி பாடசாலை கட்டிடம் அமைக்கப்பட வேண்டிய முறை மற்றும் அதற்கு தடைகளை விதித்தல் ஆகியன தொடர்பிலும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இவ்வாறு நடந்துகொள்வதன் ஊடாக எமது மக்களிடையே இனவாத அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு பார்த்துக்கொண்டிருக்கும் குழுக்களுக்கு தேசிய நல்லிணக்கத்திற்கு எதிராக இவர்களுக்கு உற்சாகம் அளிப்பதே இங்கு நடக்கின்றது.
புதின பூமிக்குள் மத நடவடிக்கை, அறநெறி பணிகளை முன்னெடுக்கும் சுதந்திரம் உள்ளது. ஏதேனும் பிரச்சினை இருப்பின் சம்பந்தப்பட்ட பௌத்த பீடங்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களை சந்தித்து அது தொடர்பில் கலந்துரையாடி வேலைகளை செய்ய வேண்டும். அதனை விடுத்து நள்ளிரவில் பொலிஸாரை அனுப்பி விகாரையில் நடக்கும் அபிவிருத்தி பணிகளில் எவ்வாறு தலையிட முடியும்? இது யாருடைய உத்தரவு? இந்த நடவடிக்கைகளை செயற்படுத்துவது யார்?
இதனால் அரசாங்கத்திற்கு ஒன்றை கூறுகின்றோம். நாட்டின் மேலான சட்டம் தொடர்பில் தெரியவில்லை என்றால் அதன் பிரதிகளை ஹன்சாட்டில் இணைக்கின்றேன். இதேவேளை ஏற்பட்டுள்ள நிலைமையை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்கின்றேன். ஜனாதிபதி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மகாநாயக்க தேரர்களை சந்தித்து அவர்களின் ஆலோசனைகளை பெற்று ஏற்படக்கூடிய இனவாத, மதவாத தீயை நிறுத்தி நீதி, நியாயத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.





