உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைகுழுவை ஸ்தாபிப்பதற்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது: பேராசிரியர் சவித்ரி
தலைவர்களுக்கு அரசியல் இயலுமை காணப்படுமாக இருந்தால் குறித்த வரைவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான வரைவொன்று தாயரிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அமலாக்குவது குறித்து அரசியல் தலைவர்களுக்கு அரசியல் இயலுமை காணப்படுமாக இருந்தால் அவற்றை முன்னெடுக்க முடியும் என்று பேராசிரியர் சவித்ரி குணசேகர தெரிவித்தார்.
அத்துடன், மோசமான குற்றவியல் வன்முறைகளுக்கான நீதியை நிலைநாட்டுவதை திசைமாற்றி தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான மாற்றாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை பயன்படுத்த இடமளிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்
இலங்கை இதழியற் கல்லூரியில் 19-01-2026 அன்று சுதந்திர ஊடக இயக்கம், சுதந்திர ஊடக தொழிற்சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த 'கறுப்பு ஜனவரி இன்னமும் இருட்டாகவே உள்ளது' எனும் தொனிப்பொருளிலான கறுப்பு ஜனவரி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தென்னாபிரிக்காவில், மிக மோசமான இனவன்முறைகள் நிலவியதன் பின்னரான சூழலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த ஆணைக்குழு தொடர்பில் பல்வேறு வகையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டன. குறிப்பாக, மோசமான வன்முறைகளுக்கான மன்னிப்பு அளிக்கும் ஒரு உபாய மார்க்கமாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை பயன்படுத்த முடியாது.
மோசமான வன்முறைகள் நடைபெற்றிருந்தால் அவை தொடர்பில் குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் வழக்கு விசாரணைகள் ஊடாகவே தண்டனை அளிக்கப்பட வேண்டும். நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், இழக்கப்பட்ட வன்முறைகளுக்கு நீதி வழங்கல் என்ற போர்வையில் தண்டனை வழங்கலுக்கு மாற்றாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை பயன்படுத்த முடியாது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது, உண்மைகளை ஒப்புக்கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையாகும். இதில் பாதிக்கப்பட்ட தரப்புக்களும் பாதிப்பை ஏற்படுத்திய தரப்புக்களும் நிகழ்ந்ததை ஏற்றுக்கொண்டு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதாகும். இந்தச் செயற்பாடானது சமூக ரீதியான கட்டமைப்பில் முக்கியதொரு விடயமாகும்.
ஆனால், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதன் ஊடாக குற்றவியல் குற்றங்களை புரிந்தவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பிப்பிழைத்துக்கொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்க முடியாது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டாலும் குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் அவை நீத்துறையின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
உண்மையில் 2015-2019 ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர ஆகியோரின் முனைப்புக்கு அமைவாக எனது தலைமையில் சில சட்ட வரைஞர்கள் ஒன்றிணைந்து உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான வரைவொன்றை தயாரித்திருந்தோம்.
அந்த வரைவின் சில உள்ளடக்கங்களை உள்ளடக்கியே வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்துக்குரிய வரைவும் தயாரிக்கப்பட்டிருந்தது.
கருத்துச் சுதந்திரத்தினை வெளிப்படுத்துவதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள், மற்றும் அடக்குமுறைகள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற பொறிமுறையை அமல்படுத்துவது பற்றி கலந்தாலோசிக்கலாம். தலைவர்களுக்கு அரசியல் இயலுமை காணப்படுமாக இருந்தால் குறித்த வரைவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
அதேநேரம், பாடசாலைகளில் ஊடக கல்வியை வலுவானதாக கற்பிப்பது பற்றியும் அதன் அவசியம் பற்றியும் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது. என்னுடைய கேள்வி என்னவென்றால் பாடசாலையிலும் சரி பல்கலைக்கழகங்களிலும் சரி, ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மாணவர்களுக்கு தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தினை வழங்குகின்றார்களா என்பது தான்? என்றார்.





