உயிர்த்த ஞாயிறு விடயத்தில் கோட்டாவை கைது செய்யாதது ஏன்: சிறிதரன் எம்.பி கேள்வி
பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்து சிறையில் வைத்துள்ளீர்கள்.

அரசியல் ரீதியாக புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதனை இன்னும் முன் வைப்பதற்கான தயார் நிலையில் அரசு இல்லை. ஜே .ஆர்.ஜெயவர்த்தன, மஹிந்த ராஜபக்ஷ் விட்ட தவறுகளை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார தனது பலத்தை பயன்படுத்தி தானும் விடுவாரானால் நாடு, தான் விரும்பும் திசையில் தமிழர்களுக்கான ஒரு தீர்வு நோக்கியே பயணிக்கும். அது தமிழர்களுக்கான சுய நிர்ணய தீர்வாக அமையுமென தமிழரசுக்கட்சி உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பிள்ளையான் ஒரு கருவி. அவரைக்கைது செய்து விசாரிக்கும் அரசு .தாக்குதலின் கர்த்தா எனக்கூறப்படும் கோட்டாபய ராஜபக்ஷவை ஏன் கைது செய்து இன்னும் விசாரிக்கடவில்லை எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் 23-07-2025 அன்று இடம்பெற்ற கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இன்றைய நாள் இலங்கை வரலாற்றில் முக்கியமான நாள்.இந்த நாட்டில் ஜூலை இனப்படுகொலை நடந்து 42 வருடங்களாகிவிட்டன. ஜே .ஆர். ஜெயவர்த்தன தலைமையில் லலித், காமினி திசாநாயக்க போன்றவர்களின் வழிகாட்டலில் தமிழர்கள் மீது மிக மோசமான இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டது. வெலிக்கடை சிறையிலிருந்த குட்டிமணி, தங்கதுரை,ஜெகன் உட்பட பலர் வெட்டி சாய்க்கப்பட்டார்கள் பிறக்கப்போகின்ற தமிழீழத்தை பார்க்கவா போகின்றீர்கள் எனக்கேட்டு அவர்களின் கண்கள் பிடுங்கி எறியப்பட்டன.
ஜூலை 23 தமிழர்களின் வரலாற்றில் ஒரு கறுப்புநாள். 42 வருடங்கள் கடந்தும் எந்த பொறுப்புக்கூறலும் இல்லாமல், நீதி இல்லாமல் .விசாரணைகள் இல்லாமல் இருக்கின்ற இந்த நேரத்தில் அதனை நான் பதிவு செய்கின்றேன். இந்த நாட்டில் எந்த அரசு வந்தாலும் இதற்கு ஒரு மன்னிப்புக்கோரலையோ நீதியான விசாரணைகளையோ பரிகரத்தையோ தேட முற்படவில்லை.
1984 -03 11 ஆம் திகதி இந்தியாவிலிருந்த வெளிவந்த ''சண்டே'' என்ற ஆங்கில சஞ்சிகை ஆசிரியர் அனிதா பிரதாப்புக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் 30 வயது நிரம்பிய தலைவரான பிரபாகரன் ''ஜே.ஆர். ஒரு உண்மையான பௌத்தராக இருந்திருந்தால் நான் ஆயுதம் தூக்க நேர்ந்திருக்காது '' என்று கூறினார்.
எமது மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. நாம் தொடர்ந்தும் நீதிகேட்டு போராடுகின்ற இனம். இந்த நாட்டின் தற்போதைய ஜனாதிபதியாகவிருக்கின்ற அநுரகுமார ஒரு மண்குடிசையிலிருந்து இந்த நாட்டின் ஜனாதிபதியாக மாளிகை வரை வந்தவர். அம்மா சுட்டுக்கொடுத்த பலகாரங்களை ரயில்களில் விற்று சாதாரண பிரஜையாக வாழ்ந்து ஜனாதிபதியாகியுள்ளார். அடையாளமுள்ள ஒரு தேசிய இனம் எவ்வளவுதூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை உளப்பூர்வமாக உணரக்கூடிய ஒரு தலைவராக அநுரகுமார இருப்பார் என்றே நான் கருதுகின்றேன்.
நீங்களும் வியர்வையும் இரத்தமும் சிந்தி 56 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சி பீடம் ஏறியுள்ளீர்கள். வரலாறு யாரையும் காத்திருக்க வைப்பதில்லை. அதேபோல் தமிழர்கள் சிந்திய இரத்தத்திற்கும் கண்ணீருக்கும் வரலாறு நிச்சயம் ஒரு வாய்ப்பைக்கொடுக்கும். அந்த வாய்ப்பை புரட்சியாளரான அநுரகுமார எவ்வாறு கையாளப்போகின்றார் என்ற விடயத்தைத்தான் நாம் பார்க்கின்றோம்.
இந்த நாட்டில் எங்கு தோண்டினாலும் எலும்புக்கூடுகள்தான் வருகின்றன. மனிதப்படுகொலைகள் நடைபெற்ற மனிதப்புதைகுழிகள் நிறைந்த நாடாகவே இலங்கை உள்ளது. செம்மணியில் செவ்வாய்க்கிழமை வரை 80 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை இதற்கான நீதி விசாரணைக்கான கதவு திறக்கப்பட்டதாகஎதெரியவில்லை.
குறிப்பாக யாழ் மண்ணில் 2003 ஆம் ஆண்டுக்கு மேற்படட காலத்தில் அப்போதிருந்த கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையில் ஒரு குழு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினுடைய ஆதரவோடு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கை கவனத்தில் எடுக்கப்படாது கிடப்பில் போடப்பட்டுள்ளது. அறிக்கை விபரம் கூட வெளிவரவில்லை. 2003. 10. 28 ஆம் திகதி இந்த நாட்டின் தலைவர்களிடம் கொடுத்திருந்தார்கள். ஆனால் எந்த தீர்வும் யாருக்கும் கிடைக்கவில்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவின், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன . நாட்டில் ஒரு தீர்வைப் பற்றி யோசிப்பதற்காக யாருமே சிந்திக்கவில்லை. இலங்கை-இந்திய ஒப்பந்தம் வந்தபோது ஜே .ஆர். ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சியால் அந்த ஒப்பந்தம் ஒரு நீதியான தீர்வை கொண்டு வருவதற்கான பாதையை திறக்கவில்லை.
அதேபோல் 2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவிருந்தார். யுத்தத்தை முடித்துவைத்த மன்னனாகவே அவர் பார்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு கிடைத்த இலங்கையில் யாருக்குமே கிடைக்காத அந்த அருமையான வாய்ப்பை அவர் தன்னுடைய, இயலாமை, இனவாதம் காரணமாக தவறவிட்டார். அதனை இல்லாமல் செய்தார். அதனால் இன்று அவரும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றார்.
இந்த நாட்டின் தலைவர்களுக்கு அரிய வாய்ப்புக்கள் கிடைப்பதுண்டு.இன்றும் கூட அநுரகுமாரவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.159 எம்.பி.க்களை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். குறிப்பாக 2005 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதிக்கு முதல் சுனாமி கட்டமைப்பிலிருந்து விலக வேண்டுமென அப்போதைய தலைவர் சோமவன்ச தலைமையிலான ஜே.வி.பி. ஜனாதிபதி சந்திரிக்காவை வலியுறுத்தியது.
அந்த கட்டாயப்படுத்தலுக்கு சந்திரிகா பணியாததால் 16 ஆம் திகதி சந்திரிகா அரசிலிருந்து ஜே .வி.பி.வெளியேறியது. 39 எம்.பி க்களை கொண்டிருந்த ஜே .வி.பி. 5 காரணங்களை முன்னிறுத்தி அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான சுனாமி பொதுக்கட்டமைப்பை உடைத்தெறிந்தது.
இங்குள்ள ஜே .வி.பி. தோழர்கள் ஒரு போராளிகள். வரலாறு உங்கள் 50 வருடங்களுக்கு பின்னர் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளது.இதே போன்று தமது மண்ணில் போராடியவர்கள் மாவீரர்களாக துயிலும் இல்லங்களில் உறங்கிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த துயிலும் இல்லங்களுக்கு மேலால் இராணுவம் முகாம்கள் அமைத்து தமது சப்பாத்து கால்களுடன் நடந்து திரிகின்றது. உதைபந்தாட்டம் விளையாடுகின்றது. இவ்வாறான நிலையில் எப்படி சகோதரத்துவம் வரும்?உங்களுக்கும் எங்களுக்குமான உறவு எப்படி நீடிக்கும்?நீங்களும் நாங்களும் இந்த நாட்டு பிரஜைகளாக எவ்வாறு ஒன்றாக கைகோர்க்க முடியும்? தயவு செய்து சிந்தியுங்கள்.
நாங்கள் எதற்கும் புறம்பானவர்கள் அல்ல. யாரையும் தள்ளி வைத்து பார்க்கவில்லை. ஒற்றுமையை விரும்புகின்றோம். ஆனால் நாங்கள் நாங்களாக, தமிழர்கள் ஒரு தேசிய இனமாக ,எனக்ளுக்கே உரித்தான இறையாண்மையின் அடிப்படையில் வடக்கு,கிழக்கிலுள்ள எமது பூர்வீக மண்ணில் வாழ்கின்ற உரிமையோடு இருப்பதற்கான உத்தரவாதத்தையே நாம் கேட்கின்றோம். இந்த உத்தரவாதம் கிடைக்காத வரைக்கும் இந்த நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வு. ஒற்றுமை எவ்வாறு வர முடியும்?
பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்து சிறையில் வைத்துள்ளீர்கள். அவர் சேட்டை குற்றங்களுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும். நாம் அதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மையமாக வைத்து அவர் விசாரிக்கப்படுகின்றார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடந்தது 2019.05 21 ஆம் திகதி அதேமாதம் 27 ஆம் திகதி முன்னர் இந்த நாட்டில் பாதுகாப்பு செயலாளராகவிருந்த கோட்டபாய ராஜபக்ஷ ரொய்ட்டர் செய்தி சேவைக்கு ''இஸ்லாம் மதத்தினால் இந்த மண்ணில் எவ்வாறு தீமை நடக்கபோகின்றது,இஸ்லாம் இந்த நாட்டை எவ்வாறு அழிக்கப்போகின்றது .இதற்கு பின்னால் யார் இருந்தார்கள்'' என்பதனை சொல்கின்றார். ஆகவே பிள்ளையான் ஒரு கருவி மட்டுமே. கர்த்தாக்களான கோத்தபாய ராஜபக்ஷ் ஏன் இந்த நாட்டில் இன்னும் விசாரிக்கப்படவில்லை? .2019-05-27 ஆம் திகதி ராய்ட்டர் செய்தி சேவைக்கு கோத்தபாய ராஜபக்ஷ் வழங்கிய பேட்டியை நான் சபாபீடத்திற்கு சமர்ப்பிக்கின்றேன்
வடக்கு, கிழக்கு என்பது தமிழர்களின் அபிவிருத்திக்கான பிரதேசம். ஆனால் அபிவிருத்தி செய்ய நீங்கள் பின்னடிகின்றீர்கள். தமிழர்கள் அபிவிருத்தியில் முன்னுக்கு வந்துவிடுவார்கள் எனப்பயப்படுகின்றீர்களா?42 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் வ்வர்த்தகத்துறையில் தமிழர்கள் செலுத்திய ஆதிக்கத்தை அழிக்கவே ஜே .ஆர்.ஜெயவர்த்தன கறுப்பு ஜூலை கலவரத்தை திட்டமிட்டு ஏற்படுத்தினார். தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்தார்,நாம் மீண்டும் கேட்கின்றோம் இந்த நாட்டுக்குள் நாங்கள் நாங்களாக வாழ ஏன் காங்கேசன்துறை துறைமுகம் ,பலாலி,மட்டக்களப்பு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய முடியாது? தலைமன்னாருக்கும் இராமேசரத்துக்குமிடையில் ஏன் பாலம் அமைக்க முடியாது?இந்த நாட்டில் உள்ளவர்களிடம் நல்ல எண்ணங்களை காணமுடியாதுள்ளது.
அநுரகுமார ஜனாதிபதியாக பதவியேற்று 304 நாட்களாகிவிட்டன. அரசியல் ரீதியாக புரையோடிப்போயுள்ள தமிழம்மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதனை இன்னும் முன் வைப்பதற்கான தயார் நிலை ,அதுபற்றி பேசுவதற்கான வாய்ப்பு இந்த அரசிடம் கொண்டுவரப்படவில்லை .வடக்கில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. மக்கள் இன்னும் உறவினர் வீடுகளிலும் அகதி முகாம்களிலும் உள்ளனர். ஆனால் இங்கிருந்து சிலர் சகோதரத்துவ ரயிலில் அங்கு போகின்றார்கள். ஒரு சிங்கள தேசிய இனத்துக்குரிய அடையாளங்களை நாம்ஏற்றுக் கொள்வதுபோல் தமிழனத்திற்கான அடையாளங்களை நீங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.என்றார்