அமெரிக்க தீர்வை குறித்து சாதகமான பதில் கிடைக்கும்; பிரதி அமைச்சர் அனில் ஜயந்த
இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

அமெரிக்கா உலக நாடுகளுக்கு விதித்துள்ள பரஸ்பர தீர்வை வரி பற்றி மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்த வரி இலங்கைக்கு மாத்திரம் விதிக்கப்படவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தீர்வை வரி தொடர்பில் அமெரிக்காவுடன் வெகுவிரைவில் இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். சாதகமான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என பொருளாதார திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் ) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
சந்தையில் திட்டமிட்ட வகையில் உப்பு தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஒரு தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகளை தோற்கடித்துள்ளோம். போதுமான அளவு உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை சிறந்த முறையில் செயற்படுத்தியுள்ளோம்.
பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை செயற்படுத்தி பொருளாதார ஸ்திரப்படுத்தலை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் ஒரு தரப்பினர் வேண்டுமென்றே பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் வகையில் தவறான கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள்.
அமெரிக்கா உலக நாடுகளுக்கு விதித்துள்ள பரஸ்பர தீர்வை வரி பற்றி மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்த வரி இலங்கைக்கு மாத்திரம் விதிக்கப்படவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இந்த பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்காவுடன் இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை இலங்கைக்கு சாதகமானதாக அமையும்.
தீர்வை வரி திருத்தம் தொடர்பில் அமெரிக்கா 14 நாடுகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வரை மாத்திரமே நிவாரணமளிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் அமெரிக்காவுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திடவில்லை.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வரி கொள்கைகளே தற்போது அமுல்படுத்தப்படுகின்றன.புதிதாக எவ்வித வரிகளும் தற்போது அமுல்படுத்தப்படவில்லை. மக்களை தவறாக வழிநடத்தும் கருத்துக்களை குறிப்பிடுவதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.