பாதுகாப்பு, எரிசக்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மோடியின் கொழும்புப் பயணத்தின் போது கையெழுத்தாகின்றன
இந்தியப் பிரதமர் ஏப்ரல் 4 முதல் 6 வரை சிறிலங்காவுக்குப் பயணம் செய்யவுள்ளார் என்று விக்ரம் மிஸ்ரி கூறினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்காவுக்கான பயணத்தின் போது பாதுகாப்பு, எரிசக்தி இணைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
புதுடில்லியில் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியப் பிரதமர் ஏப்ரல் 4 முதல் 6 வரை சிறிலங்காவுக்குப் பயணம் செய்யவுள்ளார் என்று கூறினார். அவர் ஏப்ரல் 4 மாலை நாட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி அநுராதபுரம் சென்று அங்கு இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளின் அடையாளமாக கருதப்படும் ஜய ஸ்ரீ மகா போதியில் நடைபெறும் மதச் சடங்குகளில் கலந்து கொள்ளவுள்ளார். அனுராதபுரத்தில் இந்தியா நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் சில திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.





