மாரடைப்பை தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் 3 வகையான ஸ்டெண்டுகளை வைத்தியசாலைகளில் இருந்து மீளப் பெற தீர்மானம்
ஸ்டெண்டுகள் பொதுவாக இதய இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், இரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
மாரடைப்பை தடுப்பதற்காக இதயக் குருதிநாளங்களினுள் பொருத்தப்படும் 3 வகையான ஸ்டெண்டுகளை வைத்தியசாலைகளில் இருந்து மீளப் பெற மருத்துவ விநியோகப் பிரிவு தீர்மானித்துள்ளது. இவ்வகையான ஸ்டெண்டுகளை சிகிச்சைக்காகப் பயன்படுத்துவதால் நோயாளரின் பாதுகாப்புத் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதால் அவற்றை பாவனையிலிருந்து அப்புறப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோயாளரின் சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் போது மேற்படி மூன்று வகையான ஸ்டெண்டுகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் பாரதூரமான சிக்கல்கள் உள்ளதாக தர நிர்ணய மதிப்பீடு மற்றும் மேலாய்வுத் தரவு மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் என்ஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கு முகம் கொடுக்கும் நோயாளர்களின் பாதுகாப்பு கருதி மருத்துவ விநியோகப் பிரிவு இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளது.
அத்தோடு குறித்த வகைகளைச் சேர்ந்த ஸ்டெண்டுகளைப் பயன்பாட்டிலிருந்து அப்புறப்படுத்துமாறும், அதனைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் மருத்துவ விநியோகப் பிரிவு சகல வைத்தியசாலைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. ஸ்டெண்டுகள் பொதுவாக இதய இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், இரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் 3 வகையான ஸ்டெண்டுகள் நோயாளர்களுக்கு பாதுகாப்பற்றவை என மதிப்பீடுகளில் தெரியவந்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாவனைக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்படும் குறித்த 3 வகையான ஸ்டெண்டுகளின் எஞ்சிய கையிருப்பைக் கொண்டு, இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும், விசாரணைகள் நிறைவடையும் வரை அவற்றைப்பயன்படுத்துவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ விநியோகப் பிரிவு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர்கள், வைத்தியசாலைப் பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய சுகாதார நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இவ்வகையான ஸ்டெண்டுகளைப் பொருத்திக்கொண்ட நோயாளர்களின் உடல்நிலைத் தொடர்பிலும் கண்காணிக்குமாறு மருத்துவ விநியோகப் பிரிவு சம்பந்தப்பட்ட வைத்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.





