பிரான்ஸ் தூதுவருடன் டில்வின் சந்திப்பு
பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவை மேலும் மேம்படுத்தி தொடர்ந்து பேணுவதற்கும், பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளில் பிரான்ஸின் முதல் வரிசை முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதற்கும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்துக்கமைய ஊழல் மோசடியை தடுப்பதற்கும் நிதி வீண்விரயத்தை குறைப்பதற்கும் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. 2026 ஆம் ஆண்டாகும்போது பொருளாதாரத்தை வலுப்படுத்தி, அதை நிலையாகப் பேணும் நோக்கத்துடன் தாம் செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் மற்றும் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கிடையில் 13-10-2025 அன்று பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில், பிரான்ஸ் தூதுவர் அலுவலத்தின் உதவி செயற்பாட்டுப் பிரதானி மெதிவ் ஜோன் மற்றும் ஊடக உத்தியோகத்தர் தினேஷா இலேபெரும ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பின்னர் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு பிரான்ஸ் தூதுவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவுகின்ற இராஜதந்திர உறவுகளை எதிர்காலத்தில் மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுபோல, இலங்கைக்குள் தேர்தலின் பின்னர் வன்முறைகள் நிலவாமை தொடர்பில் தனது மகிழ்ச்சியை தெரியப்படுத்திய தூதுவர் ரெமி லெம்பர்ட், தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்து ஒரு வருடம் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அதுபோல, ஊழல் மோசடித் தடுப்பு மற்றும் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பல் நடவடிக்கைகள் தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் தூதுவர் பாராட்டியுள்ளார்.
இதன்போது, ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் ஊழல் மோசடியை தடுப்பதற்கும் நிதி வீண்விரயத்தை குறைப்பதற்கும் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும், 2026 ஆம் ஆண்டாகும்போது பொருளாதாரத்தை வலிமைப்பெற செய்வதற்கும், அதை நிலையாக வைத்துக்கொள்வதற்குமான நோக்கத்துடன் தாம் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதல், கடல் வளத்தை பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவத்திற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் பிரான் தூதுவர் ரெமி லெம்பர்ட் இதன்போது தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவை மேலும் மேம்படுத்தி தொடர்ந்து பேணுவதற்கும், பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளில் பிரான்ஸின் முதல் வரிசை முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதற்கும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இலங்கையுடன் தொடர்புகளை பேணும்போது ஒருபோதும் திரைமறைவு நிகழ்ச்சி நிரல் இருக்காது என்றும், எதிர்காலத்தில் அரச தலைவர்கள் பிரான்ஸில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.