தெரிவுக்குழு யோசனை முன்வைக்க தீர்மானம்: தயாசிறி ஜயசேகர
மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு பாராளுமன்றம் விரைவாக தீர்வு காண வேண்டும் என்றார்.
மாகாணசபைத் தேர்தல் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்கும் யோசனையை முன்வைக்க எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம். காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை நடத்த ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் உட்பட சகல தரப்பினரும் பொது கொள்கையின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.
மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பில் பெப்ரல் அமைப்பு 28-08-2025அன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம்.பழைய தேர்தல் முறைமையா அல்லது புதிய தேர்தல் முறைமையா என்பதில் எமக்கு எவ்வித சிக்கலும் கிடையாது.பாராளுமன்றத்துக்குள் இது தொடர்பில் இதுவரையில் எவ்வித கலந்துரையாடல்களும் ஆரம்பிக்கப்படவில்லை என்றார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன,சரியானதை செய்வதற்காகவே நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள்.அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஒருவருடம் நிறைவடையவுள்ளன.இருப்பினும் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை.தேர்தலுக்கு அரசாங்கம் தயாரா என்பதும் தெரியவில்லை.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்,மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கொண்டு வந்த தனிநபர் பிரேரணை குறித்து சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க ' சுதந்திரன் கொண்டு வந்த அதே பிரேரணையா' என்று கேள்வியெழுப்பியுள்ளார் .அதற்கு 'ஆம்' என்று பதில் கிடைத்தவுடன் 'அவ்வாறாயின் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கபோவதில்லை'என்று குறிப்பிட்டுள்ளார்.மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு பாராளுமன்றம் விரைவாக தீர்வு காண வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, மாகாணசபைத் தேர்தல் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம். காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை நடத்த ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் உட்பட சகல தரப்பினரும் பொது கொள்கையின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.





