இந்திய துணை ஜனாதிபதி இன்று வருகை
குறித்த சந்திப்புக்கள் நிறைவடைந்ததையடுத்து, கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெறும் பிரத்தியேக கூட்டத்தில் இந்திய வம்சாவழியினர் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளதோடு விசேட உரையாற்றவுள்ளார்.
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 19-04-2026 அன்று வருகை தரவுள்ளார்.
இலங்கைக்கு முதற்தடவையாக வருகை தரும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வரவேற்பு வழங்கப்படவுள்ளது.
இதனையடுத்து கொழும்புக்கு வருகை தரும் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் தனித்தனியான சந்திப்புக்களை நடத்தவுள்ளார். இதன்போது ஆளும் எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனையடுத்து நண்பகலுக்குப் பின்னர் வட கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கட்சிதமிழ்க் கட்சிகளின் தலைவர்களை ஒருமித்து சந்திக்கவுள்ளார்.
குறித்த சந்திப்பில் தமிழ்க் கட்சிகளின் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்களையும் ஒருமித்துச் சந்திக்கவுள்ளார்.
குறித்த சந்திப்புக்கள் நிறைவடைந்ததையடுத்து, கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெறும் பிரத்தியேக கூட்டத்தில் இந்திய வம்சாவழியினர் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளதோடு விசேட உரையாற்றவுள்ளார்.
அதனையடுத்து, கதிரேசன் ஆலயத்தில் வழிபாடுகளில் பங்கேற்கவுள்ள இந்திய துணை ஜனாதிபதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் சம்பிராதயபூர்வமான இராப்போசன விருந்துபசாரத்திலும் பங்கேற்கவுள்ளார்.
இதேவேளை, நாளையதினம் மலையகத்துக்கு விஜயம் செய்யும் அவர் சீத்தா எலிய சீதை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





