சேர்பெறுமதி வரி குறித்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்படாது - பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர
60 மில்லியன் வரம்பாகக் காணப்படும் வெற் மற்றும் சமூக பாதுகாப்பு வரிகளை 36 மில்லியனாகக் குறைப்பது தொடர்பில் சமூகத்திலும் ஒரு பேசும்பொருள் இருந்தது.
சேர்பெறுமதி வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி ஆகியவற்றிற்கான வருடாந்த வருவாய் வரம்பை 60 மில்லியன் ரூபாவிலிருந்து 36 மில்லியன் ரூபாவாக குறைப்பதற்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 23-06-2026 அன்று நடைபெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு,சிறப்பு பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள்,இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான விதிமுறைகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: வருடாந்த வருவாய் வரம்பை 60 மில்லியன் ரூபாவிலிருந்து 36 மில்லியன் ரூபாவாக குறைப்பதற்கான இந்த முன்மொழிவு எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருந்தது. அமைச்சரவை மற்றும் சட்டமா அதிபரின் உரிய அனுமதி, அத்துடன் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளைப் பெற்ற பின்னர் இந்த முன்மொழிவை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான வரிகளை விதிக்குமாறு எதிர்க்கட்சியினரே ஆரம்பத்தில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இந்த நடவடிக்கைக்கு அவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்க முடியாது.
அரசாங்கம் என்ற ரீதியில் இந்த சந்தர்ப்பத்தில் அந்த வரம்பை 36 மில்லியன் ரூபாவாகக் குறைப்பது பொருத்தமானதல்ல எனத் தீர்மானிக்கப்பட்டதாகவும், அதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குத் தேவையான ஆயத்தப் பணிகள் மற்றும் வரி வசூலிப்பு முறைகளைத் தயாரிப்பதற்கு கால அவகாசம் தேவை.
இந்தத் தீர்மானம் அமைச்சரவையினால் எடுக்கப்பட்டதாகவும்,அதற்கமைய உரிய திருத்தங்களுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் குறித்து நிதிக்குழுவில் இது குறித்து விரிவாகக் கலந்துரையாடினோம். 60 மில்லியன் வரம்பாகக் காணப்படும் வெற் மற்றும் சமூக பாதுகாப்பு வரிகளை 36 மில்லியனாகக் குறைப்பது தொடர்பில் சமூகத்திலும் ஒரு பேசும்பொருள் இருந்தது.
அரசாங்கம் என்ற ரீதியில் இதனை இந்த சந்தர்ப்பத்தில் கொண்டு வரக்கூடாது என்று நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஏனெனில், இந்த சந்தர்ப்பத்தில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அதற்குத் தயாராக வேண்டும். வரி வசூலிப்பு முறைகளைச் சீரமைக்க வேண்டும். எனவேஇ ஒரு வகையில் இந்த சந்தர்ப்பம் அதற்குப் பொருத்தமான நேரமல்ல என்று நேற்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப்பெற்று, இன்றைய தினம் (நேற்று) குழுநிலை விவாதத்தின் போது அது நிறைவேற்றப்படும் என்றார்.





