வருண ஜயசுந்தரவை தற்போதைக்கு கைது செய்யும் தீர்மானம் இல்லை
சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் 17-06-2026 அன்று தீர்மானித்தது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவை தற்போதைய நிலையில் கைது செய்யும் தீர்மானம் எதுவும் இல்லை என சட்டமா அதிபர் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
இதன் காரணமாக , சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் 17-06-2026 அன்று தீர்மானித்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி வருண ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவானது, சசி மகேந்திரன் மற்றும் ஆதித்ய படபெந்திகே ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதற்கு முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான பிரதிப் பொலிஸ் மா அதிபரை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தது.
இது தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் விளக்கமளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், பிரதிப் பொலிஸ் மா அதிபரின் இடமாற்றம் குறித்த உரிய பரிந்துரைகளை பொலிஸ் மா அதிபர் தற்பொழுது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.





