4 ஆவது நாளாகவும் வைத்தியர்கள் நாடு தழுவிய பணி புறக்கணிப்பு
கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களினால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், இன்றைய தினமும் வைத்தியசாலை சேவைகள் ஸ்தம்பிதமடைய உள்ளன.
வைத்தியர்களுக்கான இடமாற்ற நடைமுறையில் சுகாதார அமைச்சரின் தன்னிச்சையான தீர்மானங்கள் மற்றும் அரசியல் தலையீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் 06-04-2026 அன்று 4 ஆவது நாளாகத் தொடர்கின்றது.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களினால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், இன்றைய தினமும் வைத்தியசாலை சேவைகள் ஸ்தம்பிதமடைய உள்ளன.
வைத்தியர்களுக்கான இடமாற்ற நடைமுறையில் சுகாதார அமைச்சின் தன்னிச்சையான செயற்பாடுகளைக் கண்டித்து, கடந்த 4 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பமானது. ஏற்கனவே கடந்த மாதம் 31, இம் மாதம் 2 ஆம் திகதியும் அடையாளப் பணி பகிஸ்கரிப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் நேற்றைய தினமும் இடம்பெற்றது.
இந்நிலையில், இன்று (6) திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் நாளை காலை 8.00 மணிவரை வரை மீண்டும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று மாலை கூடிய சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்திற்கமையவே இன்றைய தினம் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இடமாற்றச் சபையின் அனுமதி அல்லது அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரமோ இன்றி, 2026 ஆம் ஆண்டுக்கான பயிற்சி நியமனங்கள் மற்றும் பின்தங்கிய பிரதேச இடமாற்றப் பட்டியலை அமைச்சு தன்னிச்சையாக வெளியிட்டுள்ளது. அத்தோடு 393 ஆக இருந்த பின்தங்கிய பிரதேச சேவை நிலையங்களை 265 ஆக குறைத்தமை மற்றும் ஒரு வருட சேவைக்காலத்தைத் தன்னிச்சையாக இரண்டு வருடங்களாக நீடித்தமை போன்ற தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே வைத்தியர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்தத் தொழிற்சங்க போராட்டத்தில் நோயாளிகளின் நலன் கருதி மகப்பேறு, சிறுவர், புற்றுநோய் மற்றும் சிறுநீரக சிகிச்சை அலகுகள் உள்ளிட்ட அவசர சிகிச்சைச் சேவைகள் மாத்திரம் எவ்விதத் தடையுமின்றி இயங்குவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இலவச சுகாதாரத் துறையை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை இவ்வாறான நெருக்கடிக்குள் தள்ள வேண்டாம் என பொதுமக்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.





