இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு
ஏதேனுமொரு இலங்கை பிரஜை இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல்களால் காயமடைந்திருந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டிருந்தாலோ அவர்கள் இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையிலான மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் அங்குள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த சிக்கலான சூழலில் அங்குள்ள இலங்கையர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் டுபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் தங்கியிருக்கும் இலங்கையர்களிடம் தான் தனிப்பட்ட ரீதியில் பேசியதாகவும், அவர்களுக்கு தற்காலிக வீசா கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்கு விமான சேவை நிறுவனங்கள் தங்குமிட வசதிகளை வழங்கியுள்ளன. ஐக்கிய அரபு எமிர் இராச்சிய தூதரகம் அவர்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஏதேனுமொரு இலங்கை பிரஜை இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல்களால் காயமடைந்திருந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டிருந்தாலோ அவர்கள் இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகத்தின் துணை பிரதானியை 0094718447305 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கும், தொழிலாளர் நலன்புரி ஆலோசகரை 0094716833513 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கும், தொழிலாளர் நலன்புரி சேவைகள் இரண்டாம் செயலாளரை 0094719742095 என்ற என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கும் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.





