ஆளும் தரப்பு உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்காமைக்கான காரணம் என்ன? சாணக்கியன் எம்.பி.
இனப்பிரச்சினைக்கு உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு காண வேண்டும் என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பான உத்தேச குழுவுக்கு ஏன் ஆளும் தரப்பில் இருந்து பெயர் பரிந்துரைகளை இன்னும் முன்வைக்கவில்லை. மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்காகவே அரசாங்கம் இந்த குழு நியமனத்தை பரிந்துரைத்தது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். குழுவுக்கான உறுப்பினர் நியமனமும் இன்று தாமதிக்கப்பட்டுள்ளது. பெயர் பரிந்துரைகளை முன்வைப்பதில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் குறிப்பிட வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆளும் தரப்பிடம் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய்ந்து விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கும் யோசனை ஆளும் தரப்பினால் கடந்த டிசெம்பர் மாதம் பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது. இந்த குழு நியமிக்கப்பட்டு மூன்று மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குழுவுக்கு எதிர்க்கட்சி சார்பில் எனது பெயர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், நிசாம் காரியப்பர் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றளவில் ஆளும் தரப்பில் இருந்து இந்த குழுவுக்கு உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை.
இனப்பிரச்சினைக்கு உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு காண வேண்டும் என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார். ஆனால் அதற்கான எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. பல பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமாயின் மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்த வேண்டும்.
உத்தேச குழுவுக்கு ஏன் ஆளும் தரப்பில் இருந்து பெயர் பரிந்துரைகளை இன்னும் முன்வைக்கவில்லை. மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்காகவே அரசாங்கம் இந்த குழு நியமனத்தை பரிந்துரைத்தது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.
குழுவுக்கான உறுப்பினர் நியமனமும் இன்று தாமதிக்கப்பட்டுள்ளது. ஆளும் தரப்பில் இருந்து பெயர் பரிந்துரைகளை முன்வைப்பதில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் குறிப்பிட வேண்டும் என்றார்.





