தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கவனயீர்ப்பு
தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய “விடுதலை” நிகழ்வின் இரண்டாம் நாள் இன்று வெள்ளிக்கிழமை நினைவேந்தல் நிகழ்வு மற்றும் அரங்க நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளிற்கு நீதி வேண்டிய நினைவேந்தலும், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது விடுதலைக்கான “விடுதலை” எனும் தொனிப் பொருளிலான கவனயீர்ப்பின் முதலாம் நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்பு வாசலில் இருந்து தொடங்கிய நடைபயனம் கிட்டுப் பூங்காவினை அடைந்து, தொடர்ந்து விடுதலை விருட்சத்திற்கான விடுதலை நீர் பொதுக்குவளையிடுதலும், முன்னாள் அரசியற் கைதி விவேகானந்தனூர் சதிஸ் சிறைக்காலத்தில் எழுதிய“துருவேறும் கைவிலங்கு” எழுத்து ஆவணப்பேழை ஆய்வறிமுகவும் நடைபெற்றது.
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர். சி.ரகுராம், ஊடகவியலாளர் அ.நிக்சன் ஆகியோர் கலந்து கொண்டு நூல் வெளியீட்டுரை மற்றும் ஆய்வுரையினை நிகழ்த்தியிருந்தனர்.
மேலும், குறித்த நிகழ்வின் போது மதத் தலைவர்கள், அரசியற் கட்சிச் செயற்பாட்டாளர்கள், அரசியற் கைதிகளின் குடும்பத்தினர், விடுவிக்கப்பட்ட முன்னாள் அரசியற் கைதிகள், குடிமக்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய “விடுதலை” நிகழ்வின் இரண்டாம் நாள் இன்று வெள்ளிக்கிழமை நினைவேந்தல் நிகழ்வு மற்றும் அரங்க நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட மகள் ஒருவர் தனது தந்தையை விடுதலை செய்யுமாறு மனமுருகி கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில், அம்மாவின் வயிற்றில் நான் 8 மாசம் இருக்கும் பொழுதே அப்பாவைப் பிடித்து விட்டார்கள். எனக்கு 17 வயது ஆகின்றது. 17 வருடங்களாக தந்தையின் அரவணைப்பின்றி தனியாகவே இருந்துள்ளேன். கடந்த 17 வருட கால அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. தற்போதைய அரசாங்கத்திலாவது எனது தந்தையை விடுவிப்பார்களா? என உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.