வாகன இறக்குமதியை மட்டுப்படுத்த தீர்மானிக்கவில்லை: இலங்கை மத்திய வங்கி ஆளுநர்
மத்திய வங்கியின் நாணயச்சபைக்கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் எனும் தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் மட்டுப்பாடுகளை விதிப்பதற்கான எந்தவொரு தீர்மானமும் மத்திய வங்கியினாலோ அல்லது அரசாங்கத்தினாலோ மேற்கொள்ளப்படவில்லை எனவும், வாகன இறக்குமதி நடவடிக்கைகளுக்கான சந்தை திறந்திருக்கும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாணயச்சபையின் தீர்மானங்களக அறிவிக்கும் நோக்கில் நேற்று புதன்கிழமை இலங்கை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேவேளை மத்திய வங்கியின் நாணயச்சபைக்கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் எனும் தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சமகால உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிலைவரங்களைக் கருத்திற்கொண்டே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு இத்தீர்மானம் எதிர்வருங்காலத்தில் பணவீக்கத்தை 5 சதவீத மட்டத்தை நோக்கி வழிநடத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என மத்திய வங்கி எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
அதேபோன்று பணவீக்கமானது இக்காலாண்டில் நேர்மறையாகத் திரும்பலடையும் எனவும், பின்னர் 5 சதவீதம் எனும் இலக்கினை நோக்கி வலுவாக உயர்வடையும் எனவும் மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது. அதேபோன்று இக்காலப்பகுதியில் மையப்பணவீக்கமானது பொருளாதாரக் கேள்வி நிலைமைகளின் நிலையான மீட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும், அது எதிர்வரும் மாதங்களில் படிப்படியாகத் தொடர்ந்து அதிகரிகவும் எனவும் மத்திய வங்கியின் எதிர்வுகூறலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"நாட்டின் பொருளாதாரம் இவ்வருடத்தின் முதலாம் காலாண்டில் 4.8 சதவீதம் கொண்ட உறுதியான வளர்ச்சியைப் பதிவுசெய்தது. இவ்வளர்ச்சி வேகம் எதிர்வரும் காலங்களிலும் தொடரும் என பொருளாதாரக் குறிகாட்டிகள் காண்பிக்கின்றன. அண்மைய கொள்கை வட்டிவீதக் குறைவுக்குப் பதிலிறுக்கும் வகையில் அநேகமான சந்தை வட்டிவீதங்கள் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளன" என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் உலகளாவிய ரீதியில் மாற்றமடைந்துவரும் வர்த்தக நிலைவரம் மற்றும் புவிசார் அரசியல் முரண்பாடுகள் என்பவற்றின் காரணமாக கொள்கைசார் நிச்சயமற்றதன்மை தீவிரமடைந்திருப்பதாகவும், இதுகுறித்து நாணயச்சபை உன்னிப்பாகக் கண்காணிக்கும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.